பகிரப்படும் தாலந்துகள்


பகிரப்படும் தாலந்துகள்

          நாம் அனைவரும் தாலந்து உவமையைப் பற்றி அறிவோம். ( மத் 25:14-30 ) இறைவன் நமக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பல மடங்காகப் பெருக்க நம்மை அழைக்கின்றார். இங்கே தாலந்துகள் எனப்படுவது இவ்வுலகச் செல்வத்தையும், பதவியையும் மட்டும் குறிப்படுவன அல்ல.

          பலருக்கும் பலவகைப்பட்டத் திறமைகள் இருக்கும். அது பகிரப்படும் போது மட்டுமே பல மடங்காகப் பெருகும். ஏனெனில் அதிகமாக இரைக்கப்படுகின்ற கிணற்றில் தான் ஊற்று சுரக்கும். திறமைகள் பகிரப்பட வேண்டுமெனில் நாம் இறை அன்பால் நிரப்பப்பட வேண்டும். இறைவனை நோக்கி நாம் தாகத்துடன் நம் தேடலைத் துவங்கும் போதும், அந்தத் தேடல் வலுப்படும் போதுதான் இறை அன்பை நம்மால் உணர முடியும். இறைவன் நம்மிடம் காட்டும் அன்பை உணரும்போதுதான் பிறரன்பு நம்மில் பெருகும்.

          பிறரன்பால் நாம் நிரப்பப்படும் போது நமது வாழ்வில் அற்புதங்களும், அதிசயங்களும் நிகழும். நாம் பகிர்ந்தளிப்பது நமது மன்னிக்கும் மனப்பாங்காக இருக்கலாம்; பிறரை சிரித்து மகிழ வைக்கும் நமது பேச்சாக, செயலாக இருக்கலாம்; பிறரது வேதனைகளை கனிவோடு கேட்கும் நமது பண்பாக இருக்கலாம்; இரகசியங்களைக் காப்பாற்றும் நமது நேர்மையாக இருக்கலாம்; பிறரை ஆற்றுப்படுத்தவோ, வழிநடத்தவோ செய்யக்கூடிய நமது திறமையாக இருக்கலாம். நாம் பகிர்வது பாட்டி வைத்தியமோ, சமையலறை நுணுக்கங்களோ, எதுவானாலும் அது அன்பின் வெளிப்பாடுதான். இவ்வாறு சிறிய, சிறிய செயல்கள் மூலம் பிறரை மகிழ்வித்து, பிறரது வாழ்வில் வளமையையும், இறை அன்பையும், இறை சமாதானத்தையும் கொண்டு வரும்போது நாமும் நற்செய்திப் பணியாளர்களே.

          நமது வீட்டுப் பெரியவர்களிடம் நாம் கேட்கும் அனுபவப் பாடங்கள் நமது வாழ்க்கையின் வெற்றிக்கு ஏணிப்படிகள். அதனை நாம் ஒருவர் ஒருவரோடு பகிரும்போது நமது சமுதாயம் ஏற்றமிகு சமுதாயமாக மாறும். நம்மைப் பிறர் துன்புறுத்தும் போது, வேதனைப் படுத்தும் போது அவர்களுக்காக நாம் செபிக்க வேண்டும். ( மத் 5:44 ) நமது செபமும், ஆண்டவரின் இரக்கமும் அவர்களுக்குத் தேவையாக இருப்பதாலே அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்கிறார்கள். மறந்து போன நமது கடமையை அவர்கள் நமக்கு நினைவுறுத்துகிறார்கள். நமது செபத்தால் அவர்கள் இறை இரக்கத்தைப் பெற்று இறைவன் அருளும் மீட்பைப் பெற முடியும். அவர்களோடு நாமும் மீட்கப் பெறுவோம்.

          எனவே நான் திறமையற்றவள்; என்னால் பிறருக்குப் பயனில்லை என்று நம்மைத் தாழ்த்துவது இறைவனை அவமதிப்பதாகும். ஏனென்றால் இறைவன் தமது சாயலாக, அரசக் குருத்துவத் திருக்கூட்டமாக நம்மைப் படைத்துள்ளார். எனவே நம்முடைய நேர்மறை உணர்வுகளை, திறமைகளை, குணங்களை, மதிப்பீடுகளைப் பட்டியலிடுவோம். அவற்றைப் பிறரோடு பகிர்வோம். அப்பொழுது ஐந்து தாலந்து பத்துமடங்கல்ல நூறு மடங்காகப் பெருகும். நாமும் உலகிற்கு ஒளியாக மாறுவோம்.

Comments