நமது வாழ்க்கைச் சூழலில் நடக்கும் நிகழ்வு
நமது
வாழ்க்கைச் சூழலில் நடக்கும் நிகழ்வு
இந்த நிகழ்வையொத்த ஒரு நிகழ்வு புனித தோமாவின் வாழ்க்கையில்
நடக்கிறது. இயேசு இறந்தவுடன் இயேசுவின் சிலுவை
மரணம், சீடர்களின் நம்பிக்கையை குலைக்கிறது. ஏனென்றால், இயேசுவின் மரணம் அரசியல், மதம் சார்ந்த சூழ்ச்சியாலும், பொறாமையாலும்
நடைபெற்றது. சமூகத்தில் உயர் மட்டத்தில் இருந்த
குருக்களையும், அரசியல் தலைவர்களையும் எதிர்த்து
நம்மால் என்ன செய்ய முடியும் என்று சீடர்கள் பயந்து ஒரு அறையிலே கதவை மூடி ஒளிந்து
இருக்கிறார்கள். இயேசுவின் கொள்கைகளையும், வழிமுறைகளையும் கைவிட்டுவிட்டு யூத குருக்களின் வழியில் செல்ல அவர்கள் மனம் ஒப்பவில்லை. தைரியமாக இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றவும் முடியவில்லை. அந்த நேரத்தில் நல்லாயனாம் இயேசு தன் ஆடுகளைப் பார்க்க அறையினுள்
ஊடுருவி அவர்கள் நடுவே தோன்றுகிறார். நம்பிக்கையை
ஊட்டுகிறார். அன்று தோமா அங்கு இல்லை நம்ப மறுக்கிறார். தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருந்தாலும் ஒரு ஆட்டைத் தேடி அலைபவர்
அல்லவா நமது ஆண்டவர். எனவே தோமாவுக்கும் தமது பிரசன்னத்தை
வெளிப்படுத்துகிறார். ஆண்டவரைக் கண்டவுடன் தமது நம்பிக்கையின்மை குறித்து தோமா வெட்கமுறுகிறார்.
ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்கிறார்.
அதன் விளைவே ‘என் ஆண்டவரே;
என் தேவனே' எனும் அவருடைய விசுவாச அறிக்கை. தன்னைச் சுற்றி
இருள் சூழ்ந்து இருந்த வேளையில் இயேசுவின் மேல் வைத்த நம்பிக்கை எனும் திரி அணையுமுன்
இயேசுவின் பிரசன்னம் ஒளியாய் அவரைச் சூழ்கிறது. இயேசுவின் ஒளி அவரை ஊடுருவ, துணிவோடு
இந்தியா நோக்கி வருகிறார். மதத்தால் பிணைக்கப்பட்ட இந்திய நாட்டில் துணிந்து இறைமகனின் நற்செய்தியைப்
பரப்புகிறார்.
நம்பிக்கை ஊட்டும் நற்செய்திப்பணி:
நம்முடைய அன்றாட வாழ்வில் சுற்றங்கள்,
நட்புகள் இருந்தும் மனதளவில் தனிமையை உணரும் நபர்கள் பலரைச் சந்திக்க நேரிடும். அவர்களது உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது
புரிந்தும் புரியாதது போலோ நடந்து கொள்கிறோம். பெற்றோர்களுக்குக்
குழந்தைகளையும், குழந்தைகளுக்குப் பெற்றோர்களையும்
புரிந்து கொள்ள முடியாத மனநிலை. அலுவலகத்திலோ,
கல்வி பயிலும் இடங்களிலோ, குழுமங்களிலோ போட்டி மனப்பான்மை. அங்கீகாரமற்ற நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு இயேசு என்னும் ஒளியை ஏற்றி
தன்னுயிரை ஈந்த இறைமகனின் அன்பை எடுத்துக் கூற வேண்டும்.
அப்போது தான் நம்பிக்கை எனும் விதை அவர்களில் ஊன்றப்படும்.
இயேசு தமது பணி வாழ்வின் தொடக்கத்தில் வாசித்த ஏட்டுச்
சுருளின் வாசகங்கள் இதைத்தான் கூறிக்கின்றன. (லூக்
4:17-20)
நம்பிக்கை தரும் ஒளி:
நமது வாழ்வும்,
நமது செயல்களும், நமது அர்ப்பணமும், இறை நம்பிக்கையை மக்களுக்குத் தூண்ட வேண்டும்.
இதற்கு நமது அன்புச் செயல்கள் நமக்கு உதவும்,
எனவே குணநலன்களையும், தகுதி,
திறமைகளையும் வைத்து யாரையும் தீர்ப்பிட்டு ஏளனமாகக் கருதக் கூடாது. அனைவரையும் பிரிக்கின்ற பகைமை எனும்
சுவரை தமது உடலின் துன்பத்தால் அழித்து இயேசு அனைவரையும் ஒன்று படுத்தினார்.
(எபே 2:14) எனவே
நம்பிக்கை வெளிச்சத்தை எதிர்நோக்கி
இருக்கின்ற மக்களுக்கு நமது அன்புச் செயல்களால்
அவர்களது வாழ்வில் ஒளியேற்றி உலகை ஒளிமயமாக்க முயலுவோம்.
ஆண்டவரின் அன்பும் ஆசீரும்:
இருளில் இருந்து ஒளிக்கு நம்மை அழைத்து
வருகின்ற இறைவன் தமது ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புகின்றார். துன்பத்தில் உழலும் போது இறைவனுக்கு முதலிடம் கொடுத்த நாம், இன்பத்தில் திளைத்திருக்கும் போது இறைவனிடம் கேட்டுப் பெற்ற வரங்களை, இறைவன் அளித்த ஆசீர்வாதங்களை முதன்மைப்படுத்தி இறைவனை மறந்து
விடுகிறோம். நமது நம்பிக்கை இறைவனை விட்டு அகன்று, செல்வம், கல்வி,
பதவி, உறவுகளிடம் இடம் பெயர்ந்து விடுகிறது. நமது இறைநம்பிக்கை தடம் புரள்வதைத்
தான் இறைவன் விக்கிரக ஆராதனையாக விவிலியத்தில் உருவகிக்கிறார். இந்தத் தவற்றைத் தான் சவுல் அரசர், சாலமோன்
அரசர் போன்றோர் செய்தார்கள்.
தோமாவோ, நம்பிக்கையற்ற சந்தேக உணர்வோடு
பேசினாலும் உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னம் அவருள் நம்பிக்கை விதையை ஊன்றுகிறது.
அது விருட்சமாக வளர்ந்ததன் காரணமாக அந்நிய நாட்டிலே அதாவது நமது
இந்திய நாட்டிலே தான் பெற்ற நம்பிக்கையை நற்செய்தியாகப் பரப்புகிறார்.
நம்பிக்கையைத் தூண்டும் செபம்:
அன்னை மரியா பயந்துபோயிருந்த சீடர்களை ஒன்றிணைத்துச்
செபிக்கத் தூண்டினார். அவ்வாறே நாமும் சேர்ந்து தளர்ந்து
பயந்து போனவர்களை ஒருங்கிணைத்து செபிக்கத் தூண்டவேண்டும். அவர்களைக்
குற்றப்படுத்திக் கடிந்து கொள்ளாமல் பரிந்துரை செபங்களினால் உற்சாகப்படுத்தி
எழுந்து பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான்
இறைநம்பிக்கை நம்மிலும், நமது திருச்சபையிலும், உலகிலும் தழைத்தோங்கும். எனவே அன்னை மரியையும், திருத்தூதர் தோமாவையும் பின்பற்றி உலகில் இறையாட்சி பரவ நாமும்
உழைப்போம்.
Comments
Post a Comment