உண்மையை இடைக்கச்சையாக் கட்டிக் கொள்வோம்
உண்மையை இடைக்கச்சையாக் கட்டிக் கொள்வோம்
நார்ப்பட்டுக் கச்சை ஒன்றை வாங்கிக் கொள்ள இறைவாக்கினர் எரேமியாவை ஆண்டவர் அழைக்கின்றார். பின்னர் அதனை ஆற்றில் உள்ள பாறையில் ஒளித்து வைக்கச் சொல்கிறார். பின்னர் அதை எடுத்துப் பார்க்கும்போது
அது இற்றுப் போயிருக்கின்றது. (எரே 13:1-11)
போலித்தனம், உண்மை அற்ற நிலை, இறை திட்டத்திற்குச் கீழ்ப்படிந்து அதன்படி நடவாமல் இருத்தல் எல்லாம் பாறையாக மாறி உண்மை அதில் மறைந்து நைந்து போய் விடுகிறது. எனவே
தூய ஆவியானவர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினாலும் உண்மை இல்லாததால் கச்சை ஆண்டவரோடு
ஒன்றித்திருப்பது போல் நம்மால்
ஆண்டவரோடு இணைந்து இருக்க முடியவில்லை. ஏனென்றால் துணையாளாராம் தூய ஆவியானவர் உண்மையின் ஆவியானவர் (யோ 14 : 17) அவர்
நமக்காகப் பரிந்து பேசிச் செபிப்பார். நம்மிடம் உண்மை இல்லையெனில் நாம்
வேண்டுவதை எவ்வாறு பெற முடியும்?
பொய்யாம் அலகை:-
அலகை பொய்யன் (யோ 8 : 44) எனவே
அது பொய்யைக் கூறி ஆதிப்பெற்றோரைப் பாவத்தில் வீழ்த்துகிறது.
இறைமகன் இயேசு விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பாளராக இருக்கின்றார். (உரோ 5 : 11) நமது மனிதப் பலவீனத்தைப் புரிந்து
கொண்டு நம்மைப் பலவகையில் அவர்
விண்ணக வாழ்வுக்குத் தயார் படுத்துகிறார். எப்படிச் செபிக்க வேண்டுமென்று நாம் கற்றுக்கொள்ள துணையாளாராம் தூய ஆவியை இறைவன் நமக்குத் தந்துள்ளார் (உரோ
8:26)
செவிகளைத் திறப்போம்:
போலித்தனத்தில் இருந்து விடுபட முதலில் கேள்வித் திறனை(
Listening Power ) மேம்படுத்த வேண்டும். பிறர் மதிப்பிற்குரியவர் என்று எண்ணும்போதுதான் பிறர் கூறுவதை நாம்
கவனமுடன் கேட்போம். பிறர் நம்மிடம் கூற விழைவது என்ன?
என்று ஆராயும் போதுதான் நமது விருப்பத்தையும்,
நோக்கத்தையும் இணைந்து புதிய திட்டம் உருவாகும் இது இருவருக்கும் ஏற்றதாக அமையும்
இந்த உரையாடலுக்கு நம்மிடம் உண்மையான அன்பு இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறே
இறைவனோடு முழு மனதுடன் தன்னார்வ மனத்துடன் திருவிவிலியம், ஜெபங்கள்,
திருப்பலி வழியாகவும், ஆவியானவர் வழியாகவும் உரையாடும்போது அவர் நம்மிடம் விரும்புவதை உணர்ந்து கொள்ள முடியும்.
அப்போது நமது திறமை, எதிர்பார்ப்பு,
சூழ்நிலை ஆகியவற்றை அதற்கு ஏற்றார்போல் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
பரிசேய மனநிலை:
இறைவனைச் சட்டத்தின்
கண்கள் வழியாகப் பார்த்த பரிசேயரை இயேசு வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறைகள் என்று
காட்டுகிறார். திருச்சட்டம் கொடுக்கப்பட்டதன்
நோக்கமே இறைவனையும், பிறரையும் அன்பு செய்ய வேண்டும் என்று
மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான். ஆனால் இறைவனின் விருப்பத்தைப்
புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல் சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்துக் கொண்டு,
தங்களை நல்லவராக பரிசேயர்கள் சமூகத்தில் நிலைநிறுத்தி வந்தார்கள். எனவே கடைசிவரை இயேசு தான் மெசியா என்று புரிந்து கொள்ளும் தெய்வீக ஞானமற்றவர்களாய் மீட்பை ருசிக்காமல்
போயினர்.
திருத்தூதர்களின் வாழ்வு:
பவுல் தனது யூதமதத்தின் மீது உண்மையான பற்று வைத்திருந்தார். எனவேதான் அவர் கடவுளால்
தேர்ந்து கொள்ளப்பட்டார். இயேசுவை உண்மையாகவே அன்பு செய்து
சிலுவை அடிவரை சென்ற யோவானிடம் மரியன்னையை இயேசு ஒப்படைக்கிறார். அதற்குக் காரணமான யோவானின் தூய அன்பு அவரது திருமுகங்களில்
வெளிப்படுகிறது. தடுமாற்றம் அடைந்தாலும் தவறுக்காக
மனம் வருந்தும் உண்மையான அன்பு பேதுருவை திருச்சபையின் தலைமை பீடத்திற்கு உயர்த்துகிறது. இந்த உண்மையான அன்பினால்தான் பிரிந்து சென்ற சீடர்கள் திரும்பவும்
இணைந்து செபித்து தூய ஆவியைப் பெற்றுக் கொள்கின்றார்கள். நற்செய்திப்
பணி புரிய உலகெங்கும் செல்கின்றனர்.
பழைய ஏற்பாட்டிலும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், தன்னார்வத்துடனும், தெய்வ பயத்துடனும் இறைவனையும், தங்கள் அயலாரையும் நேசித்த தாவீது அரசர்,
தானியேல், யூதித்து,
ரூத்து போன்றோர் தூய ஆவியினால் நிரப்பப்பட்டு, ஞானத்துடன்
செயல்பட்டு இறையாசீரை தாராளமாய் பெற்றுக்கொண்டனர்.
இறைவிருப்பத்திற்கு அடிபணிதல்:
நமது பிரச்சனைகளை முன்னிறுத்திப் புலம்பாமல் இறைவிருப்பத்திற்கு
நம்மை முழுவதும் அர்ப்பணிப்பதுதான் உண்மையான அன்பாகும். இவ்வாறு
செயல்பட இறைவன் துணையை நாடி நமது விருப்பங்களை மறந்து இறைத்திட்டத்தை
நிறைவேற்றும்போது நமது போலித்தனம் நீங்கும். இழக்கும் போதுதான் பெறுகிறோம். என்பதற்கேற்ப
இறைவிருப்பத்திற்காக நமது விருப்பங்களைத் துறந்தாலும் இன்னல்களுக்கிடையே அவற்றைப் பன்மடங்காகப்
பெறுவோம். (மாற் 10 : 29 – 30) உண்மையில் இறைவனை வழிபட (யோ 4 :
23 – 24) அதாவது முழுவிருப்பத்துடன் எந்தச் சுய நலமும்
இல்லாமல் இறைவனை வழிபட நாம் கிறிஸ்துவின் போர்வீரர்களாய் மாற வேண்டும்.
போலியான வழிபாட்டில் இருந்து நாம் விடுபடும் போது தான் உண்மையான
இறைஞானம் நம்மில் நிரம்பும்; தேர்ந்து தெளியும் அறிவு நமக்குக்
கிட்டும். குழப்பமான மனநிலை நீங்கும் தெளிவான
முடிவுகள் நம்மால் எடுக்க முடியும். எனவே கடவுளை
உண்மையில், உள்ளத்தில் முழு மனதுடன் வழிபடுவோம்.
Nalla irai varthai
ReplyDelete