அன்பே கடவுள் என்றால்



அன்பே கடவுள் என்றால்

          இறைவன் தன்னைப் போன்ற சாயலில் மனிதனைப் படைத்தார். இதுவே நல் விதை. இந்த விதை விளைந்து நல்ல பயிராக வளருகிறது. இறைவன் மனிதனோடு உறவாடுகிறார். தினமும் மனிதனைச் சந்திக்கின்றார். பேசுகின்றார்; உலாவுகின்றார். எனவே இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பு அன்பு பிணைப்பாக உள்ளது. அவ்வாறே ஆதாமுக்கும், ஏவாளுக்கும் உள்ள உறவும் அன்பினால் கட்டுண்டுள்ளது. எனவே மனிதன் ஏவாளை என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் என்று கூறுமளவுக்கு ( தொ.நூ 2:23 ) அன்பு செய்தான். இந்த நேரத்தில் எதிரி தன் விதைகளையை விதைக்கின்றான். கடவுளைப் பற்றி அவதூறைப் பரப்பி கடவுளுக்கு எதிராக ஏவாளைத் தூண்டுகிறான். இவ்வாறு வெறுப்பு விதைக்கப்படுகிறது.

வெறுப்பின் விளைவுகள்:
         
          வெறுப்பு கீழ்ப்படியாமையைத் தூண்டுகிறது. கீழ்ப்படியாமை முதல் பாவத்திற்குக் காரணமாகிறது. இவ்வாறு அலகை விதைத்த விதை கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை முறிக்கிறது. இரண்டாவதாக மனிதருக்கு இடையே உள்ள உறவை முறிக்கிறது. சதையின் சதையான மனைவி பாவத்திற்கு பின்நீர் கொடுத்த பெண்ணாகமாறுகிறார். ( தொ.நூ. 3:12 ) இவ்வாறு உறவு முறிவு பட்டபின் பிறக்கின்ற காயின் தன் சகோதரனுடன் முரண் படுகின்றான். அவனைக் கொலை செய்கின்றான்.

வெறுப்பின் கனிகசப்பின் கனி:
        
          வெறுப்பு சுயநலத்தைப் பிறப்பிக்கிறது. சுயநலம் பிறரது அங்கீகாரத்தை நாடுகிறது. காயினின் வெறுப்பு அவனிடம் சுயநலத்தைத் தோற்றுவிக்கிறது. முதற் பலனைக் கடவுளுக்குத் தரும் மனது இல்லை. முதற் பலனைத் தனக்கென்று வைத்துக்கொண்டு மற்றதைக் கடவுளுக்கு காணிக்கையாக அளிக்கின்றான். ஆனால் தனக்கு கடவுளின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறான். வெறுப்பு கடவுளின் பாதையில் நம்மை நடத்தாது. நமது பாதையில் கடவுள் வரவேண்டும் என்று எண்ணத் தூண்டும்.

திருச்சபையில் வெறுப்பின் விளைவு:
          
          அலகை நற்கருணை நாதரையும், நமது அன்னை மரியையும் திருச்சபையின் ஆன்மீக வழிகாட்டிகளையும் வெறுக்கத் தூண்டுகிறது. ஒப்புரவு அருட்சாதனத்தை அலட்சியப் படுத்துகிறது. நமது ஆன்மீக வழிகாட்டிகளாக பாப்பானவர், குருக்கள், கன்னியர்களை அவமதிக்கத் தூண்டி அந்த வெறுப்பினால் மக்கள் பிரிவினை சபைகளுக்கு செல்ல தூண்டுகிறது. வியாபாரத்தில் போட்டி இருக்கலாம். இயேசுவைத் தலைவராக கொண்ட நமது குடும்பத்தில் ( திருச்சபை ) பிளவு ஏற்பட்டு போட்டிக் குடும்பங்களை ( திருச்சபைகளை ) உருவாக்கலாமா? நமக்கு ஒரே விண்ணகத் தந்தை. விண்ணகத் தந்தையின் மக்களான நாம் ஒரே அன்பினால் பிணைக்கப்பட்டு உள்ளோம். அலகை வெறுப்பை விதைத்து ஒரே தந்தையின் மக்களான நம்மைப் பிரிக்கிறது. ஆனால் கடைசியில் நன்றாக விளைந்த பயிர் ஆண்டவரிடம் சேர்க்கப்படும். களையோ அலகையிடம் ஒப்படைக்கப்படும். ( மத் 13:30 )

அன்பின் கனிகள்:
          
          அன்பு தன்னலத்தை நாடாது. ( 1கொரி 13:5 ) அது சுய விளம்பரத்தையோ, அங்கீகாரத்தையோ தேடாது. மாறாகஎன் கடன் பணி செய்து கிடப்பதேஎன்றெண்ணி அதற்கானப் பலனை எதிர்பார்க்காது. கடவுளின் பாதையில் நம்மை நடத்தும். கடவுளின் திட்டத்திற்கும் கீழ்ப்படிய நம்மைத் தூண்டுகிறது.

குடும்பத்தில் அன்பு:
          
          திருச்சட்டம் அன்பில் அடங்கியுள்ளது. திருச்சட்டத்தை மீறுவது பாவம். எனவே அன்பு செய்ய மறுப்பது பாவம் ஆகும். கணவனும் மனைவியும் முழு உள்ளத்துடனும் ஆன்மாவுடனும், மணத்துடனும், கடவுளையும் தங்கள் வாழ்க்கைத் துணையையும், தங்களைச் சார்ந்தவர்களையும் அன்பு செய்ய முயற்சிக்க வேண்டும். வெறுப்பைத் தவிர்த்து அன்பினை விதைக்க முயலும் முயற்சியினைப் பொறுத்து நமது குழந்தைகள் 30%, 60%, 100% என்று பலனளிப்பார்கள். கணவனும் மனைவியும் இயேசுவை மையமாகக்கொண்டு வாழும் வாழ்வில் வெறுப்புக்கு இடமில்லை. பாவத்தின் வேர் அறுக்கப்படும். பரம்பரை நோய்கள் தலைதூக்கா.

அன்பு வேரூன்ற:
  1. இரக்கச் செயல்கள் புரிய வேண்டும் ( மத் 25:31-46 )
  2. நன்மை புரிய வேண்டும் ( யாக்‌ 4:17 )
  3. இறை இயேசுவின் பங்காளிகளான நாம் ( எபி 2:12 ) அவரைப் போன்று நம்மைத் தாழ்த்தி, நம் சுயம் மறுத்து, நமது ஆசைகளைத் துறந்து, பிறரை இறைவனில் வளர்க்க வேண்டும். இதுவே உண்மையான நோன்பு ( ஏசயா 57:6-10 )
  4. நற்செய்திப்பணி என்பது அன்பினைப் பரப்பும் பணி ஆகும். ஏனென்றால் இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். அதில் சிறிதளவையாவது வாழ்ந்து காட்டுவோம். இதுவே நற்செய்திப் பணி.
  5. நமது தவறுகளை மற்றவர் மேல் சுமத்தி பழிபோடாதிருப்போம்.
  6. மற்றவரின் தவறுக்காக நாம் அவமானப்படத் தயாராவோம்.
  7. நமது துன்பங்கள், பிரச்சனைகளை வீணாக்காமல் உலக மக்கள் அன்பினால் நிரப்பப்பட அந்த வேதனைகளை செபமாக மாற்றுவோம்.

          இவ்வாறு நாம் செய்யும் போது அன்பினால் நிறைந்து சமாதானத்தில் மனம் நிரம்பி வழியும். எனவே விண்ணரசு அன்பின் அரசு என்பதைப் புரிந்து அன்பு வழி நடப்போம்.

Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்