மரபுரிமைச் சொத்துடன் ஞானமும் சேர்ந்து அளிக்கப்படும்
மரபுரிமைச் சொத்துடன் ஞானமும்
சேர்ந்து அளிக்கப்படும்
பெற்றோரின் சொத்துரிமை
பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது. நமது பாரம்பரியத்தில் வீட்டின் தலைமகனுக்கு இவ்வுரிமை அதிகமாக வழங்கப்படுகிறது. மூத்தமகன் சகோதர, சகோதரிகளையும், வயதானவர்களையும் பாதுகாக்கும்
பொறுப்பையும் பெறுகிறார். இவ்வாறு கடமை தவறாமல் பொறுப்பு உணர்ந்து செயல்படும் மூத்த மகனின் அனுபவ அறிவு
அதிகரிக்கின்றது. உண்மையாக, முழு மனதுடன், பெற்றோரின் விருப்பத்தின்படி நடக்கும் மூத்த மகன் ஞானம் மிக்கவராய் எல்லாரோலும் புகழப்படுகிறார். இவ்வாறே விண்ணகமாம் நம் தாய்நாட்டை
அடைய இறைவனது விருப்பப்படி நாம் நடக்க வேண்டும்.
எனது எண்ணங்கள் உனது எண்ணங்கள் அல்ல:
இறையன்பும், பிறரன்பும் நிறைந்து நம்மில் வழியும் போதுதான் இறை
விருப்பத்தின்படி நடக்க முடியும். நம்மை அன்பு செய்யாதவர்களையும் அன்பு செய்ய வேண்டுமென்பதே இறைவனின் விருப்பம். ( மத் 5:44 ) ஏனென்றால் இறைவனின் எண்ணங்கள் நமது
எண்ணங்கள் அல்ல. ( எசா 55:8 ) ரூத்தின் வாழ்க்கையில் இறை அன்பையும், பிறர் அன்பையும் நாம் காணலாம். கணவனை இழந்த வேதனை இருந்த போதிலும் தனியாளாய் தவிக்கும் தனது மாமியாரை எண்ணி, பிறந்தகம்
தவிர்த்து அவரோடு செல்கிறார். மாமியாரின் விருப்பப்படி வயதான உறவினர் மூலம் தனது வம்சத்தை விருத்தி செய்கிறார். ஏசுவின் மூதாதையர்
பட்டியலில் அவரது குழந்தை இடம்பெறுகிறார் என்பதை ரூத்து ஆகமத்தில் வாசிக்கிறோம்.
அன்னையின் அர்ப்பணம்:
நமது அன்னை மரியாள்
இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணித்து ஆலயத்தில் குருக்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். ஆனால் இறைவன்
விரும்பும் அர்ப்பணம் வேறாக இருந்தது. அந்த அர்ப்பணம் உலகத்தால் அங்கீகரிக்கப்படாது. சோதனைகளும், வேதனைகளும்
நிறைந்தது. முதலில் அன்னை சென்ற பாதை பாதுகாப்பானது. உலகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் அன்னை
இறைவன் விடுத்த அழைப்பைத் தெரிந்து கொள்கிறார். இறை அழைப்பை விருப்பத்துடன் தன் வாழ்வாக்கிக் கொள்கிறார். எனவே ஞானம் நிறை கன்னிகை என அழைக்கப்படுகிறார்.
அன்பின் கனி:
பரிசுத்த ஆவியின்
கனியாகிய ஞானம் இவ்வுலக அங்கீகாரத்தை நாடாமல் அன்பினைக் கடைப்பிடித்து இறைமகனின் பாடுகளோடு
பயணித்து விண்ணக அரசை நாடும்போது நமக்கு அருளப்படும். ஏனெனில் அவர் அன்பினால் நம்மை முன் குறித்து வைத்துள்ளார். ( எபே 1:5 ).
இறை விருப்பத்தின்படி நடக்கத் தூண்டும் இரக்கச் செயல்கள்:
நாம் இரக்கச்
செயல்களை நமது வாழ்வின் அங்கமாக, ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளும்போது, இறை அன்பும், பிறரன்பும் நம்மில் பெருகும். முகவாட்டத்துடனும், அரைகுறை மனதுடனும் பகிர்தலை முதலில் ஆரம்பித்தாலும், பின்னர் அமுக்கிக் குலுங்கிச் சரிந்து
விழுமளவுக்கு பிறருடன் பகிர்ந்து வாழ்வது நமது வாழ்வின் அங்கமாக மாறிவிடும்.
இரக்கச் செயல்கள் தூண்டும் புனித
வாழ்வு:
இறைவனை
விண்ணகத்தில் துதித்துக்கொண்டு இருக்கும் மூப்பர்கள் தங்கள் தொங்கலாடைகளை இயேசுவின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக்
கொண்டவர்கள் ( தி. பெ 7:14 ) இறைமகன் இயேசுவுக்கு நாம் பங்காளிகளாய் உள்ளோம். ( உரோ 8:17 ) நமக்காக பாவமே
அறியாத இறைமகன் இரத்தம் சிந்தி நம்மை மீட்டுள்ளார். அவரது பங்காளிகளான நாம் வேதனைகளிலும், சோதனைகளிலும்
தளர்ந்து போகாமல் நமது தளர்ச்சியின் நேரங்களை நம்முடையவும், பிறருடையவும் மீட்புக்கான செபமாக மாற்ற வேண்டும். நமது சிலுவைகள், துன்பம் நிறைந்த வாழ்க்கைப்
பயணங்கள் அனைத்தையும் பிறரை மீட்கின்ற செபமாக மாற்ற வேண்டும். முணுமுணுக்காமல் சோர்வடையாமல் மகிழ்ச்சி எனும் பரிசுத்த ஆவியின் கனியோடு இந்த சிலுவைப் பாதையை நாம் மேற்கொள்ளும் போது உயிர்த்த ஆண்டவரோடு விண்ணக நாட்டில் நாமும்
குடியேறலாம். நமது வேதனைகள் செபமாக மாறி இறைவனைச் சென்றடையும் போது அலகையின் ஆதிக்கம் நம்மை விட்டு அகன்றுவிடும். நாம் நமது வேதனைகளுக்காக நன்றி கூறி துதிபாட
வேண்டும். அவற்றை மனமாற்றம் தேவைப்படும் நபருடைய மீட்புக்காகச் செபமாக மாற்ற வேண்டும். மாறாகப் புலம்புவதோ, வேதனையில் மூழ்குவதோ அலகையின் ஆட்சியை வேரூன்றும். நமது புலம்பல்கள் நன்றிப்பாடல்களாக மாற வேண்டும். இவ்வாறு இறை விருப்பப்படி வாழும் போது ஞானம் இறைவன் தரும் அணிகலனாய் மாறும்.
Comments
Post a Comment