இறைவனைச் சுவைத்துப் பாருங்கள்


இறைவனைச் சுவைத்துப் பாருங்கள்

          இறைவன் அன்பாய் இருக்கிறார். அவரது சாயலாய்ப் படைக்கப்பட்ட நாமும் அவரைப் போல் இருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. எனவே, அவர் நம்மை இரக்கச் செயல்கள் புரிய அழைக்கிறார். நம் ஆண்டவர் இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல் நாமும் இரக்கமுள்ளவராய் இருக்க வேண்டும் என்று இறைமகன் இயேசு நம்மை அழைக்கிறார். அவர் தனது வாழ்க்கையில் நமக்கு முன்மாதிரியாக இருந்தார். நம்மையும் அவரைப்போல் மாற அழைக்கிறார். அவ்வாறே நாமும் இரக்கச் செயல்கள் செய்து நமக்கு மட்டும் புண்ணியம் பெற்றுக்கொள்ளாமல், பிறரையும் இரக்கச் செயல்கள் புரிய; அன்புள்ளம் கொண்டு ஒழுக, தூண்ட வேண்டும்.

இயேசுவின் பணியைத் தொடருவோம்:

          கடவுள், “ திருச்சட்ட வார்த்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதும் நமது கண்முன் வைத்திருக்க வேண்டும்என்று அழைக்கிறார். ( . 6:4-9 ) திருச்சட்டத்தை அன்பு என்னும் வார்த்தையாக இறைமகன் இயேசு மாற்றுகிறார். எனவே, பிறரை அன்பு செய்ய நமக்கு முதலில் தனிசெபம் ( Personal Prayer ) தேவைப்படுகிறது. துன்புறுத்துகிறவர்களுக்காக செபியுங்கள் என்று இயேசு அழைக்கிறார். ( மத் 5:44 ) அப்போது நாம் விண்ணகத் தந்தையின் மக்களாவோம். ( மத் 5:45 ) இரண்டாவதாக, இரக்கச் செயல்கள் அன்பினை நம்மில் ஊற்றெனப் பொங்கச் செய்கின்றன. இயேசுவின் போதகப் பணியின் துவக்கத்தில் இரக்கச் செயல்களைத் தூண்டும் வார்த்தைகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன. ( லூக் 4:18-19 ) அவரைப் பின்பற்றி அவரது பணியைப் புரிய வேண்டுமானால் இரக்கச் செயல்களை நாமும் செய்ய வேண்டும்.

           நலிந்து  நைந்து போன உள்ளத்தினரை நமது அறிவுரைகளால் மேலும் புண்படுத்தாமல் அவர்களது தனித்திறமையை வளர்த்து புகழ் எனும் ஆடையால் அவர்களை உடுத்த வேண்டும். ( எசா 61:3) பிறரைக் குற்றஞ்சாட்டி கைநீட்டிப் பேசாமல் இருக்கும்போது நமது இல்லங்கள் கட்டப்படும். நாம் பாழடைந்து போன இல்லங்களையும், உள்ளங்களையும் சீரமைத்து, கட்டியெழுப்புபவர்களாக மாறுவோம் ( எசா 58:9-12 )

நாமும் வளர்ந்து பிறரையும் வளர்ப்போம்:

          நாம் மற்றவர்களுக்குத் தான தருமங்கள் செய்து நமக்கு மட்டும் புண்ணியங்களைத் தேடாமல் மற்றவர்களையும் அன்புச் செயல்கள் செய்ய நமது அன்பினால், வாழ்வினால் தூண்ட வேண்டும். இறைவன் நமக்கு இரக்கம் காட்டுகிறார். நாம் பெற்ற இரக்கத்தைப் பிறரிடம் காட்ட நம்மை அழைக்கிறார். இவ்வாறு கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை நமக்கு அளிக்கிறார். தன்னைப்போல் நம்மையும் மாற்ற இறைவன் விரும்புகிறார், தூண்டுகிறார். அவ்வாறே நாமும் அன்புப் பணி செய்யப் பிறரைத் தூண்ட வேண்டும். நமது பணியில் பிறரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

          இயேசு ' உலகெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள் ' என்றார். அந்த நற்செய்தி இதுவேநாமும் அன்புப் பணி செய்து பிறரையும் அன்புப் பணி செய்யத் தூண்டுவதே. “ இவ்வாறு இறையரசில் அனைவரையும் கொண்டு சேர்க்க முடியும்.

தூய ஆவியானவரின் பொழிவு:

          திருச்சட்டம் நம்மை அன்பு செய்ய அழைக்கிறது. இரக்கச் செயல்கள் புரியும்போது உள்ள மனநிறைவு, இறைவனையும், பிறரையும், நம்மையும் அன்பு செய்யத் தூண்டுகிறது. இந்த மனநிறைவு, சமாதானம் இவற்றைப் பெற பிறரையும், இரக்கச் செயல்கள் புரியத் தூண்டுவோம்.

          தூய ஆவியார் அருளப்படுவது பொது நன்மைக்கே ( 1கொரி 12:7 ) நமது தேவைகளுக்காகச் செபிக்காமல் பிறருக்காக செபித்து, பிறருக்காக வாழ்ந்து அவர்களது தேவைகளை, உணர்வுகளை, ஏக்கங்களைப் புரிந்து கொண்டு வாழும்போது, தூய ஆவியானவர் நமக்கு அருளப்படுவார். எனவே நாம் மட்டும் இறைவனில் வளராமல், பிறரையும் இறைவனில் வளர்க்க அனைவரையும் இரக்கச் செயல்கள், பிறரன்பு சேவைகள் புரியத் தூண்டுவோம். நமது சேவையை மேலிருந்து கீழ்நோக்கிச் செலுத்தி உயர்ந்தவர், தாழ்ந்தவர், கொடுப்பவர், பெறுபவர் என்ற மனநிலையில் இல்லாமல் அனைவரையும் நம்மைப்போல் எண்ணுவோம், மாற்றுவோம். ஏனெனில் இறைவன் மனிதனாகப் பிறந்து நம்மை மீட்டார். கடவுள் என்ற உயர்ந்த நிலையை விட்டு இறங்கி நம்மைப் போன்று மனித உரு எடுத்து, நமக்கு மீட்பு அளித்தார். உயர்வு தாழ்வை அகற்றும்போது தான் மேடுகள் சமன் செய்யப்பட்டு, பள்ளங்கள் நிரப்பப்பட்டு, அனைவரும் சமமாகக் கருதப்படுவோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே திருவிருந்தில் பங்கு பெறுகிறோம். இந்த மனநிலை வரும்போது ஆண்டவரின் இனிமை, ஆண்டவரோடு வாழுவதன் சுவை நமக்கு புரியும் துன்பங்கள் நம்மைத் தீண்டாது.

அன்பினால் நிரம்புவோம்:

          அன்பு குறைபாடுகளே, நமது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இறைவனையும், பிறரையும் அன்பு செய்யும் போது நமது பிரச்சனைகள் ஒவ்வொன்றும் நீங்கும். கடவுளைப் போல் மனிதன் சந்தோஷமாய் வாழ, துன்பங்களில்‌ இருந்து விடுபட அன்பே நமக்கு அளிக்கப்பட்ட அருமருந்தாகும். அன்பினால் நிரம்புவோம். அனைவரையும் இரக்கச் செயல்கள் புரியத் தூண்டுவோம். அப்பொழுது இறைவன் நல்லவர் என்று நம்மால் சுவைத்துப் பார்க்க முடியும்.


Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்