சுயநலம் மறந்து பிறர்நலம் பேணுவோம்
சுயநலம் மறந்து பிறர்நலம்
பேணுவோம்
இறைத் திட்டத்திற்கு அர்ப்பணித்தல்:
அன்னை மரியாவை உலக
மக்கள் அனைவருக்கும் தாயாக இறைமகன் இயேசு அளித்தார். அன்னை மரியா இறைமகன் இயேசுவைத்
தன் உதரத்தில் தாங்கிய நேரத்தில் தன்னை இறைவனின் அடிமையாகத் தாழ்த்திக் கொண்டார். அன்று முதல், இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றது, அதன் பின்னர்
சீடர்களை இணைத்து செபித்தது வரை ' இறை விருப்பத்தின்படி நடத்தல் ' என்பதை வாழ்வின் நெறியாக அன்னை மரியா கொண்டிருந்தார். எங்கும் இயேசுவின் தாய் என்று தன்னை முதன்மைப்படுத்தாது இறைத்திட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வந்தார். எல்லா வேதனைகளையும், வியாகுலங்களையும் எண்ணிப் புலம்பாமல் தன் இருதயத்தில், இருத்திச் சிந்தித்து வந்தார். ( லூக் 2:52 ) இறைத்திருவுளத்தைப் புரிந்து கொண்டு இறைவனோடு இணைந்து வாழ்ந்தார். இறைவனின் மீட்புத் திட்டத்தில் அவரது பங்கு அளப்பரியது. எனவே துணையாளராம் தூய ஆவியை நமக்கு அருளிய
இறைமகன் அவரது தாயின் பரிந்துரை நமக்குத் தேவை என்று உணர்ந்து தமது தாயை நமக்குத்
தாயாக அளிக்கிறார். ஏனென்றால் அவரது துன்ப வேளையில் அவரது தாயின் உடனிருத்தல் அவருக்கு ஆறுதலாய்
இருந்தது. அந்த ஆறுதலை, நாமும் பெற்றுக்கொள்ள அவரை நமக்குத் தாயாகத் தருகிறார்.
இறை அன்பும் பிறர் அன்பும்:
அன்னை மரியா
இறைவனுக்கு பிரியமானவராக, மாறக் காரணம் அவரது தெய்வ சிநேகமும், பிறரன்பும் தான். அவர் இறைவன்மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு உலக மக்கள் அனைவரையும் அன்பு செய்யத்
தூண்டியது. அதன் பலனாகத் தன் ஒரே மகனை நமக்காக இழக்க முன்வந்தார். இன்னும் மகனோடு இணைந்து மீட்புப் பணியில் தமது பரிந்துரை மூலம் பங்கேற்கின்றார். உலக வாழ்வில்
இரண்டு மூன்று பிள்ளைகளை வைத்திருக்கும் அன்னையர் தமது பிள்ளைகளுக்காக தந்தையிடம் பரிந்து பேசும்போது மிகவும் கடினமாக
உணர்கிறார்கள். ஆனால் நமது அன்னையோ கோடிக்கணக்கானத் தன் பிள்ளைகளுக்காக விண்ணகத்
தந்தையிடம் பரிந்து பேசும் போது நமது செபமாலைகளே அந்த அன்னைக்கு ஆறுதல் தருகின்றன. விண்ணகத்தின் வாழ்த்தொலிகளை செபமாலை மூலம் நாம் எதிரொலிக்கின்றோம். ஏனெனில் செபமாலையின்
வார்த்தைகள் திருவிவிலிய வார்த்தைகள். தந்தையின் திருவுளமே விவிலிய வார்த்தைகளாக மாறுகின்றன. நாம் தியானிக்கும் மறையுண்மைகளும் விவிலிய
நிகழ்ச்சிகள் தான்.
சுயநலமும், கீழ்ப்படியாமையும்:
ஏவாள் தன்
சுயநலத்தால் தனது வருங்கால சங்கதியைப் பாவத்திற்கு உட்படுத்தினார். சுயநலம் நம்முள் நுழையும்போது பிறரன்பு வற்றி பிறரை ஆளும் ஆதிக்க உணர்வு தலைதூக்குகிறது. விலக்கப்பட்ட கனியை உண்ண வேண்டும் எனும் உண்டிப் பிரியம் - சுயநலம், கடவுளைப் போல் மாற வேண்டும் எனும் ஆதிக்க உணர்வாக, ஆணவமாக மாறுகிறது. தான் மட்டுமன்று, தனது துணைவரையும் பாவத்தில் விழ வைக்கின்றது. ஆதாமுக்கோ, கடவுள் வார்த்தையை
விட துணைவியின் வார்த்தை முதன்மையாகவுள்ளது. இவ்வாறு சுயநலமான, கீழ்ப்படிதலில்லாதப் பெற்றோருக்கு
போட்டி, பொறாமை, எல்லாம் தனக்கு என்று எண்ணும் மகனாகக் காயீன் பிறக்கின்றான். தன் உடன் பிறந்தவர்களின் மேன்மையைத் தாங்க முடியாத அளவுக்கு பொறாமை
தலைதூக்கி அவனைக் கொலைகாரனாக மாற்றி விடுகிறது.
நீதிமான்களின் வாழ்வு:
நீதிமான்கள்
என்பவர்கள் சட்டத்தைக் காட்டித் தப்பிப்பவர்கள் அல்ல. மாறாக கடவுளின்
விருப்பப்படியும், பிறரன்போடும் வாழ்பவர்கள். அன்னை மரியும், யோசேப்பும் சட்டத்தைக் காட்டித் தப்பிக்காமல் கடவுள் விருப்பப்படியும்
மனிதனின் தேவையை நிறைவேற்றவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். எனவே அவர்கள் திருக்குடும்பமாக வாழ்ந்தனர். தங்களது கீழ்ப்படிதலுக்கு கடவுளிடம் எந்தக் கைம்மாறும் எதிர்பார்க்கவில்லை. எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். தங்களுக்காக உழைத்து வாழ்ந்தார்கள். அன்னை மரியாளிடம் உலகின் மீட்புத் திட்டத்தில் அவர் பங்கு எடுத்துரைக்கப்பட்ட போது அவர் சிறுமியாக
இருந்தார். அவருக்குத் துணையாக பெற்றோரோ உடன்பிறந்தாரோ இல்லாத நிலையிலும் கடவுளைப்
புகழ்ந்து பாடுகிறார். இது அவரது தெய்வ சிநேகத்தையும், பிறரன்பையும் எடுத்துரைக்கின்றது. நமது துன்பங்களில் புலம்பாமல் நமது துன்பங்களை பிறரது மனமாற்றத்திற்கு
ஒப்புக்கொடுத்து அந்த துன்பங்களுக்காக ஆண்டவரைப் புகழ வேண்டும். ஆண்டவரிடம் நமது சுமையை இறக்கி வைத்து அவரது நுகத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரது நுகம் மனுக்குலத்தைப்
பாவத்திலிருந்து விடுவிப்பதே ஆகும். அவ்வாறு பணியைச் செய்யும்போது நமது துன்பங்கள் விலகி ஓடும். ஏனெனில் அவரது நுகம் எளிதானது. அவரது பணியைச்
செய்யும்போது நமது சுமைகள் குறையும். ஆதியிலே ஆதாம், ஏவாளிடம் பாவத்துக்காக கொடுக்கப்பட்ட தண்டனையிலிருந்து ( வேலைப்பளு, துன்ப துயரங்கள் ) அனைத்திலிருந்தும்
நமக்கு விடுதலை கிடைக்கும்.
இறைவிருப்பமே பிறர்நலம் பேணுதல்:
இறைவனை நமது
விருப்பத்திற்கு பயன்படுத்தாமல் நம்மை இறைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவோம். நம்மைப்பற்றியே சிந்திக்காமல் நமது
தேவைகளுக்கு மட்டும் செபிக்காமல் உலகிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்காக செபிப்போம். நமது தாய் நாட்டிற்காக, உலகில் உள்ள
இளைஞர்கள், இளம் பெண்கள், வேலையற்றோர், முதியோர், என்று அனைவருக்காகவும் செபமாலையை அர்ப்பணிப்போம். பிறரது வேதனையில் அவருக்காகச்
செபித்து அவரோடு உடனிருந்து பிரதிபலன் எதிர்பாராமல் உதவ வேண்டும். ஏனென்றால் நமக்குப்
பிறர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நாம் அவருக்கு என்ன செய்ய
முடியும் என்று எண்ணுவோம். இதுவே பொன் விதி. ( மத் 7:12 )
அன்னையின் எடுத்துக்காட்டு:
அன்னை மரியைப்
பின்பற்றும் கத்தோலிக்கர்களான நாம் அவரைப்போல சுயநலம் மறந்து, குறுகிய மனப்போக்கு நீங்கி பிறரையும் நம்மைப்போல் கருத வேண்டும். ஏனெனில் இயேசு
திருச்சபை எனும் உடலுக்குத் தலையாக உள்ளார். உடலின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பு செய்து ஒருவரோடொருவர்
இணைந்து மற்றவர்களின் துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் பங்கெடுத்து வாழ வேண்டும். இதுவே உண்மையான மனமாற்றம். எனவே சுயநலம்
மறந்து பிறர் நலம் பேணுவோம். நாம் அனைவரும் இறைஇரக்க ஆண்டவரின் இரக்கக் கடலில் நம்மை மூழ்கடித்து பெற்ற
இரக்கத்தைப் பிறருக்கும் கொடுப்போம்.
Good message
ReplyDelete