எக்காலத்திலும் உம்மையே நான் துதிப்பேன்


எக்காலத்திலும் உம்மையே நான் துதிப்பேன்

          ஆண்டவர் நம்மை அன்பு வாழ்க்கை வாழ அழைக்கின்றார். ஏனெனில் அவர் அன்பாய் இருக்கின்றார் ( யோவா 4:8 ) இறைமகன் இயேசு நம்மை அன்பு செய்து, நமக்காக சிலுவை மரணம் ஏற்று உயிர்த்ததை அறிவிப்பதே நற்செய்திப்பணி ( உரோ 1:2-4 ) இயேசு கடவுளை அன்பு செய்து அவரது திட்டத்தின்படி தம் சகோதரர்களான நம்மையும் அன்பு செய்து நம்மை மீட்டுக் கொண்டதே மிகப்பெரும் நற்செய்தி ஆகும். இந்த நற்செய்தியின் தூதர்களான நாம் ஒவ்வொருவரும் ( எபே 1:12-13 ) இறைவனையும் பிறரையும் அன்பு செய்ய கடவுள் அழைக்கிறார்.

நற்செய்திப் பணிக்கு அழைப்பு:

          எல்லா சூழ்நிலைகளிலும் பலதரப்பட்ட மனிதர்களையும் உண்மையாக அன்பு செய்வது என்பது கடினமான விஷயம்தான். ஆனால் புனிதர்கள் பாதகமான சூழ்நிலைகளிலும் இறைவனையும் மனிதரையும் அன்பு செய்ததால் தான் புனிதர்களாக மாறியுள்ளனர். ஒரு பெரிய நிறுவனத்தின் அதிபர் என்பவர் கடின உழைப்பும் ஊக்கமும் இல்லாமல் அந்தப் பதவிக்கு வர முடியாது. நற்செய்தி பணியாளராகிய நாம் ஒவ்வொருவரும் இன்றைய C.E.O – க்களைவிட மிகுந்த தலைமை ப் பண்பு உடையவர்களாக இருக்க வேண்டும்.

          நற்செய்தி பணியாளர்கள் என்ற வார்த்தைக்கும் நமக்கும் தொடர்பில்லை என்ற முறையில் நாம் இருக்க முடியாது. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் நற்செய்தி பணிபுரிய அழைக்கப் பெற்றுள்ளோம். ஒரே திருவிருந்தில் பங்கு கொள்ளும் நாம் அனைவரும் அத்திருவிருந்தின் மாண்பை பிறருக்கு அறிவிக்க அனுப்பப்பட்டுள்ளோம்.

நற்செய்திப் பணியின் சவால்:

          நற்செய்தி பணியாளர்களான நாம் ஒவ்வொருவரும் 1. உண்மை 2. இரக்கம் 3. கடவுளை அறியும் அறிவால் நிரப்பப்பட வேண்டும் ( ஒசே 4:1 ) இறைவனை உண்மையாக அன்பு செய்யும் போது நமக்கு எதிரான கருத்து கொண்டோரையும் நம்மால் அன்பு செய்ய முடியும். இறைவனை பின்பற்றுவோராக மாற்றமுடியும். அன்னை தெரேசா அவரைக் காறி உமிழ்ந்தவரையும் அன்பு செய்ததால் அவரை மனமாற்றி தனது பணிகளுக்கு பண உதவி செய்பவராக மாற்றினார். புனித தொன் போஸ்கோ இளையோருக்கான பணியில் தன்னை அர்ப்பணித்தார். தவறான வழியில் அலைந்து திரியும் இளையோரை மனம் திருப்ப அவர்களது போக்கில் வித்தைகள் சாகங்கள் புரிந்து இறைவழிக்கு நடத்திச் சென்றார். அதனால் அவரை ரவுடிகளின் தலைவர் என்று அழைத்தனர். ஆனால் அவரது விருதுவாக்கோஆடு, ஓடு, விளையாடு; ஆனால் பாவம் செய்யாதேஎன்பதாகும். இவ்வாறு அவர் புனித வாழ்க்கை வாழ்ந்தாலும் இளையோரைத் திருத்தும் போது பழிச்சொல் அவர்மீது விழுந்தது. வீடு துடைக்கும் துணி அழுக்கை அகற்றினாலும் அழுக்கு அதனில் ஒட்டிக் கொள்வது போல் கறைபடிந்தோரை மனமாற்றும்போது இந்த புனிதர்கள் அவப்பெயரைக் கட்டிக்கொண்டார்கள். இந்த அவப்பெயருக்கு பயந்து ஒதுங்கி நமது நற்செய்திப் பணியை வரைமுறைப்படுத்தும் போது நம்மிடம் உண்மை இல்லை. இரக்கம் இல்லை. கடவுளைப் பற்றிய அறிவும் இல்லை.

இறைவனின் அழைப்பு:

          கடவுள் முழு உள்ளத்தோடு நம்மை அன்பு செய்ய அழைக்கிறார். இதில் நாம் தவறும்போது நம்மிடம் உண்மை இல்லை. சிறிய சிறிய விஷயங்களில் கூட நாம் இரக்கத்துடன் நடந்துகொள்ள அழைக்கின்றார். கடவுளைப் பற்றிய அறிவு இல்லாததாலே இவ்விரண்டையும் செய்யத் தயங்குகிறோம். நம்முடைய அன்றாடக் காரியங்களில் விவிலியத்தைத் தூக்கிக்கொண்டு செல்வது முக்கியமில்லை. நற்செய்தியாம் இறையன்பையும், பிறரன்பையும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பிறரோடு பகிர வேண்டும். இதுதான் நாம் தினமும் செய்யும் சிலுவைப் பாதையாகும். ஒரு நாளில் நூறு முறை தவறினாலும் நூறு முறை முயற்சி செய்து ஒரு முறையாவது அன்புப் பணியில் வெற்றி பெற முயல்வோம். புனிதர்களின் கருத்துப்படி வெல்ல முடியாவிட்டால் இறைவார்த்தையின் படி நடக்க தினமும் முயற்சி எடுப்போம். விழுந்தாலும் அப்படியே கிடக்காமல் எழுந்து இறைவனை நோக்கி அடியெடுத்து வைப்போம். ஊதாரி மைந்தனைப்போல் நம்மைத் தாழ்த்தி இறைவனை நோக்கித் திரும்புவோம். எனவே நமது அன்புப் பணியில் தோல்வி அடையாமல் கஜினி முகம்மதுகளாக முன்னிலும் வலுவாகப் போராடி இறையரசை மண்ணில் நிறுவுவோம்.


Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்