இதோ உமது அடிமை


இதோ உமது அடிமை

          ஒரு பெண் தாயாகும் போது முழுமை அடைகிறாள் என்பது பொதுமொழி. அதன் பொருள் தாயாகும் போது ஒரு உயிரைக் கருத்தாங்கி வெளிக்கொணர்கிறார். அப்போது அனுபவிக்கும் வேதனை பிறந்த குழந்தையைப் பார்க்கும் போது மறந்துவிடுகிறது. பின்னர் குழந்தையை வளர்க்கும் நிகழ்விலே தன்னை முழுவதும் குழந்தைக்கு அடிமையாகவே அர்ப்பணிக்கிறாள். எப்பேர்பட்ட போர்க்குணம் படைத்த பெண்ணாக இருந்தாலும் தாயாக மாறும்போது சாந்தகுணம் பெற்றவராக மாறுகிறார். தாயாகும் நிகழ்வு ஒரு பெண்ணைத் திருமண வாழ்வை வெற்றிகரமாக நடத்தத் தயார்படுத்துகிறது.

தாயுள்ளம் பெற தயாரிப்பு:

          நம் ஒவ்வொருவருக்கும் நாம் பிறக்கும் போதே இறைவன் திட்டம் வகுத்துள்ளார். ( எபே 1:4-6 ). அவ்வாறே மோயீசனுக்கும் இறைவன் திட்டம் வகுத்திருந்தார். ஆண் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மோயீசன் மட்டும் பார்வோன் மகளால் அரண்மனையில் வளர்க்கப்படுகிறார். தன்னை இஸ்ரயேலின் மீட்பர் என்று மனதில் நினைத்துக்கொண்டு அதிகாரத் தோரணையில் இஸ்ரயேலரிடம் சமாதானம் நிலவ பேச்சுவார்த்தை ஆரம்பிக்கிறார். அவர்களோ, அவரைக் கொலைக் குற்றவாளி என்று அவமானப் படுத்துகின்றனர். ஊரை விட்டுப் பயந்து ஓடி மிதியான் நாட்டுக்கு செல்கிறார். அங்குள்ள பெண்ணை மணந்து அவரது மாமனாரின் ஆடுகளை மேய்த்து வருகிறார். அந்நிய நாட்டில் ஒரு அடிமை வாழ்வு வாழும் போது அவர் இஸ்ரயேல் மக்களை மீட்டுக் கொள்ளக் கூடிய ஆயனாகத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. நல்ல மேய்ப்பனாக, தாயுள்ளம் படைத்தவராக சாந்த குணமுள்ளவராக அவர் மாறுகிறார்.

          எரேமியா ஆகமத்தில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிடம் அடிமைப்பட வேண்டும் என்பது இறைவனின் அழைப்பாக இருக்கிறது. இதற்கு இஸ்ரயேல் மக்களின் அந்நியத் தெய்வ வழிபாடே காரணமாய் உள்ளது. வேற்றினத்தாரோடு கலந்து வாழும்போது நமது ஆண்டவரின் பேரன்பு இஸ்ரயேல் மக்களுக்குப் புரியும். அங்கு ஆண்டவர் பாபிலோனிய மக்களுக்காகப் பரிந்து செபிக்க அழைப்பு விடுக்கிறார். ( எரே‌ 29:7 ) இஸ்ரயேல் மக்களின் தவறினை அவர்கள் அடிமை வாழ்வின் மூலம் திருத்தி அவர்களை கொண்டு பாபிலோனிய மக்களை மீட்க இறைவன் திட்டமிடுகிறார்.

இருபக்கமும் மீட்பு:

          இறைவார்த்தை இருபக்கமும் கூர்மை வாய்ந்த வாளுக்கு ஒப்பானது. அவ்வாறே நாம் நமது துன்பங்கள், அடிமைத்தன வாழ்வு இவற்றால் பிறரது அடிமைத் தனங்களை அறுக்கும்போது நாமும் உரிமை வாழ்வை அடைய முடியும். இறைத்திட்டத்திற்கேற்ப நம்மை அர்ப்பணிக்கும் போது வளமான எதிர்கால வாழ்வு நமக்காகக் காத்திருக்கிறது. ஏனென்றால் இறைவன் வைத்திருக்கும் திட்டம் வளமான எதிர்கால வாழ்விற்கானத் திட்டம் ஆகும். ( எரே 29:11 )

மீட்பில் அன்னையின் பங்கு:

          ஏவாள் மூலமாக இவ்வுலகில் நுழைந்த பாவம் மற்றும் தண்டனைக்குப் பரிகாரமாக அன்னை மரியா தன்னைத் தாழ்த்தி இறைவனுக்கு அடிமையாக தன்னை அர்ப்பணிக்கிறார். இவ்வாறு தன் வாழ்நாளெல்லாம் தன்னை தூய்மையாய் காத்துக் கொள்கிறார். தமது மக்களாகிய நம்மையும் இறைத் திட்டத்திற்கு பணிந்து வாழ அழைக்கின்றார். தூயவராம் இறைவனிடம் தூய்மையாய் நாம் செல்ல பரிந்து பேசி செபிக்கிறார். இவ்வாறு தம்மை அடிமையாய் அர்ப்பணித்த அன்னையை இறைவன் விண்ணக மண்ணக அரசியாய் உயர்த்துகிறார்.

இறைமகனின் தாழ்ச்சி:

          மனுக்குலத்தை மீட்பதற்கு கடவுள் மனுமகனாகப் பிறக்கிறார். அடிமைபோல் சிலுவைப்பாடுகளை அனுபவித்து சிலுவை மரணத்தைத் தழுவுகிறார். இவ்வாறு பாடுகள் படவேண்டும் என்பது இறைத்திருவுளம் எனப் புரிந்துகொண்டு தன் உடலையும் இரத்தத்தையும் மனுக்குல மீட்புக்காக முன்னரே தயார் செய்கிறார். எனவே இன்றும் உயிருள்ள இறைவனோடு ஒன்றாகக் கலந்து உறவாட நம்மால் முடிகிறது. உயிருள்ள இறைவன் தனது நற்கருணைப் பிரசன்னத்தால் நம்மைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்.

          எனவே எந்த சூழ்நிலையிலும், இறைத்திட்டத்திற்கு பணிந்து நடக்கும் போது இருள் விலகி ஒளி பிறக்கும் ஒளியாம் இறைவன் நம்மை வழி நடத்துகிறார்.

Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்