கடவுள் அன்பாய் இருக்கிறார்


கடவுள் அன்பாய் இருக்கிறார்

          இறைவன் நம்மைத் தமது சாயலாகப் படைத்தார். இறைவன் அன்பாய் இருக்கிறார். ( 1 யோவா 4:16 ) எனவே அவரது சாயலாகப் படைக்கப்பட்ட நம்முள் நிரம்பி இருக்க வேண்டியது அன்பு. எனவே மனித வாழ்க்கை இறைவன் விரும்பியபடி அமைய அடிப்படைத் தேவை‌ அன்புப் பரிமாற்றமே.

மரியின் வழி அன்பு வழி:

          அன்னை மரியைப் போன்றே ஏவாளும் ஜென்மப் பாவமில்லாமல் பிறந்திருந்தாலும் ஏவாளின் சுயநலம் அவளது வழித்தோன்றல்களை பாவத்திற்கு அடிமையாக்குகிறது. மன மகிழ்ச்சியோடு தோட்டத்திலே வாழ்ந்திருந்தாலும் இறைவனைப் போன்று மாற வேண்டும் எனும் சுயநலம் மனுக்குலத்தையே அழிவுக்கு இட்டுச் செல்கிறது.

          அன்னை மரியாவுக்கோ, அவரது அழைப்பு மனுக்குலத்தை மீட்கும் மகனைப் பெற்றெடுக்கும் கடமை. அதுவும் கன்னிப்பருவத்தில். ஆனால் இறைவன் மீதும் உலக மக்கள் மீதும் கொண்ட அன்பு கனன்று எரிந்து கொண்டிருந்தாள் இறைவனின் தூய்மை அவருள் குடிகொள்கிறது. எனவே உயிருள்ள ஆலயமாக நற்கருணைப் பேழையாக மாறுகிறார்.

மரியின் வழியில்:

          நானே உலகின் ஒளி என்று இறைமகன் நம்மை ஒளியின் பாதைக்கு அழைக்கிறார். ஒளி கொடுக்கும் பொருள் தன்னை இழந்து ஒளியாக மாறுகிறது. அவ்வாறு நம்முள் அன்பு பொங்கி வழியும் போது நமது இரக்கச் செயல்களால் பிறருக்கு ஒளி கொடுத்து நாம் ஒளியாக மாறுவோம். நல்ல சமாரியனைப் போன்று தன்னையும் தனது வேலையையும் மட்டும் கருதாமல் சுயநலம் மறுத்து பிறரைக் கைதூக்கிவிடும் மனப்பக்குவத்தைப் பெற நமக்கு முன்மாதிரியாக இருப்பவர் அன்னை மரியாள். சாக்கடையில் விழுந்த மனிதனை கை தூக்கி விடும் போது நம்மீது கறைபடிந்து விடும் என்று கருதி பிறரன்புப் பணியில் இருந்து ஒதுங்கி விடுவது சுயநலம். ஆனால் அன்னையின் அன்போ தனக்கு வரப்போகும் அவப்பெயரை எண்ணி ஒதுங்கி விடாமல் மனுக்குலத்தின் மீட்புக்காகத் தம்மையே அர்ப்பணித்தார். இவ்வாறு திருச்சட்டத்தை அன்பின் சட்டமாக மாற்றினார். அவ்வாறே நமது வாழ்வும், பணிகளும் அன்பைச் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். அன்பு எல்லையில்லாதது வரைமுறை அற்றது. நமது பணி வாழ்வும் அவ்வாறே இருக்க வேண்டும்.

இறையன்பின் மகத்துவம்:

          இறைவனை அனசெய்வோர்க்கு அவர் ஞானத்தை அள்ளித் தருகின்றார். ( சீரா.நூ 1:10 ) ஞானம், இறைவனின் படைப்பைப் பற்றியும், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதைப் பற்றியும் நமக்குக் கற்றுத் தருகிறது. இறையன்பில் இருந்து விலகும்போது நான் என்கிற ஆணவம், சுயநலம் தலைதூக்குகிறது. நெபுகத்னேசர் மன்னர் தன்னைப்போன்ற சிலையைச் செய்து வழிபடச் சொன்னார் ( தானி 3 ) என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். நாமும் வெற்றிக் கனியைச் சுவைக்கும் போது எனது கைகளே இதைச் செய்தன என்று நான் என்கிற ஆணவத்தை விக்கிரகமாக கொண்டு வாழ்கின்றோம். மீண்டும் இறையன்பை உணரும் போதும், நாடும் போதும் அழிவில் இருந்து விடுபட முடியும்.

அன்புறவில் விரிசல்:

          அன்புறவில் விரிசல் ஏற்படும் போது அங்கு பகைமை, வெறுப்பு, போட்டி, பொறாமை முதலியன தோன்றுகின்றன. இவை இறைவனின் எதிரியான அலகையின் பண்புகள். எனவே வெறுப்பு நிறைந்துள்ள குடும்பங்கள், நிறுவனங்கள், குழுக்களில் அலகையின் ஆதிக்கம் வேரூன்ற ஆரம்பிக்கும். வெறுப்பு நிறைந்துள்ள இடத்தில் பாவமும் பாவத்தைத் தூண்டும் அலகையும் வேட்கை கொண்டு நம்மை ஆதிக்கம் செய்ய வாயிலில் காத்திருக்கும். ( தொ. நூ 4:7 ).

வெறுப்பு உமிழும் வேதனைகள்:

          வெறுப்பு நம்முள் வளரும்போது அலகையின் பிள்ளைகளாகிறோம். அலகையின் ஆதிக்கத்தை நாம் நாடுவதை வேசித்தனத்திற்கு இறைவன் ஒப்பிடுவதை பழைய ஏற்பாட்டு நூல்களில் காண்கிறோம். எனவே வெறுப்பு நிறைந்துள்ள குடும்பங்களில் குடும்ப வாழ்க்கை மூச்சுத்திணறலை அனுபவிக்கிறது. அங்கு அன்புப் பகிர்தல் இல்லாததால் சந்ததியினரின் திருமண வாழ்வு பிளவு படுதல், ஒவ்வாதத் திருமணங்கள் போன்றவை நிகழ்கின்றன.

          வெறுப்பு கலகத்தைத் தூண்டும். கலகம் புரிபவன் சூனியக்காரனுக்கு ஒப்பாவான். ( 1 சாமு 15:23 ) எனவே, ஒரு குடும்பத்தில், குழுமத்தில் குழப்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பை உமிழும் அலகையின் பிள்ளைகளே. எனவே வெறுப்பு உள்ள குடும்பங்களில் திருமண உறவுகள் வலுவிழந்தலும், அந்நியத் தெய்வ வழிபாடும், அதனை ஒத்த பொருளாசையும் ( எபே 5:5 ) பிரிவினை சபைகளுக்குச் செல்லுதலும் இருக்கும்.

          எனவே அன்பே நம் வாழ்வுக்கு அடித்தளமாயிருக்கட்டும் ( எபே 3:17 ). எனவே நமது அன்புச் செயல்கள் மூலம் நம்மை அன்பு செய்கின்ற இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் பிறருக்குப் பரப்புவோம். இவ்வாறு கடவுளின் முழுநிறைவையும் பெற்று விண்ணக வாழ்வுக்குத் தகுதி பெறுவோம். ( எபே‌ 4:19 )

Comments

Post a Comment

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்