நம் கடவுளாகிய ஆண்டவர் தூயவர்
நம் கடவுளாகிய
ஆண்டவர் தூயவர்
நம்மைப் படைத்த
நமது இறைவன் தூயவர் எனவே அவரது சாயலான நாமும் தூய்மையாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ( லேவி 19:2 ) நமது தூய்மையை நம்மிடமிருந்து அகற்றி நம்மைக் கறைப் படுத்துவது நமது பாவங்கள்
ஆகும். இறைமகன் இயேசு தம் இரத்தத்தால் நம்மைக் கழுவி பாவக்கறையில் இருந்து நம்மை
விடுவித்து தூய்மைப் படுத்துகிறார். ( எபே 1:7 )
ஆதிப்பெற்றோரின் ஆணவத்தை வென்ற தாழ்ச்சி:
பாவத்தின் பிடியில்
மனித குலம் சிக்குவதற்கு ஆதிப்பெற்றோரின் ஆணவம் காரணமாக இருந்தது. ஆனால் நமது இறைமகனின் தாழ்ச்சி, தந்தையின் திரு விருப்பத்திற்கு கீழ்படிதல், தந்தையின் மீதும் மனுக்குலத்தின் மீதும் வைத்திருந்த
அளவற்ற அன்பு மனுக்குலத்திற்காக சிலுவை மரணம் ஏற்கச் செய்தது. அன்னை மரியா அமல உற்பவமாகப் பிறந்து பாவம் அறியாதவராக வாழ்ந்தார். அவரது தூய்மைக்குக் காரணம் அவரது இறை அன்பும், பிறர் அன்பும் தாழ்ச்சியுமே. எனவே தூய்மையான வடிவில் விளங்கியவர் தூயவர் உறையும் விண்ணகத்தில் விண்ணக மண்ணக
அரசியாக முடிசூட்டப்படுகிறார்.
ஆணவத்தின் வழி அழிவின் வழி:
நம்மிடையே வேரூன்றி
இருக்கும் ஆணவம் நாம் இறைவனையும் பிறரையும் அன்பு செய்யத் தடையாக இருக்கிறது. காயினின் ஆணவம் சகோதரனின்
உயர்வை அங்கீகரிக்க மறுக்கிறது. கொலைப்பழிக்கு ஆளாக்குகிறது. திருப்பொழிவு செய்யப்பட்ட தாவீதின் ஆணவம் பிறன் மனைவியை தனதாக்கிக்கொள்ள
தூண்டுகிறது. ஞானமிக்க அரசராகக் கருதப்பட்ட சாலமோன் அரசரின் ஆணவம் அந்நிய தெய்வ வழிபாட்டுக்கு அவரை இட்டுச் செல்கிறது. இயேசுவின் சீடராய் இருந்த
யூதாஸ் இஸ்காரியோத்தின் ஆணவம் பாவமன்னிப்பை
அங்கீகரிக்க மறுக்கிறது.
தூய்மையின் தடைக்கல்:
ஆண்டவருடைய தூய்மையைப்
பெற நாம் இறை அன்பாலும், பிறர் அன்பாலும் நிரப்பப்பட வேண்டும். ஆண்டவர் இந்த உலகை நமக்காகப்
படைத்து நம்மை வாழ்வித்து வருகிறார். நமக்களித்த கொடையாம் உலக வாழ்வின் மீது நமக்குள்ள பற்றுகள் நமது தூய்மையைக் குலைக்கின்றன. செல்வத்தின்
மீதுள்ள பற்று பிறருடைய செல்வத்தை அபகரிக்கத் தூண்டுகிறது. பிறருக்கு நன்மை செய்வதைத் தடுக்கிறது. ஏழை இலாசருக்கு உணவூட்ட மறந்த பணக்காரரைப்
போல நம்மைச் சுற்றி வாழ்வோரின் மீது இரக்கமற்று வாழ்கிறோம். அதிகாரம், பதவியின் மீதுள்ள
பற்று பிறருடைய வளர்ச்சியைத் தடுக்கும் எண்ணத்தை நம்முள் விதைக்கிறது. நம்முடைய
திறமைகளால் பிறரை வளர்ப்பதற்குப் பதில், பிறரை அவமானப்படுத்துவதற்கும் பிறரது வளர்ச்சியைத் தடுப்பதற்கு மட்டுமே நமது திறமை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு பற்றுகள் பிறரை
அழித்து தன்னை வளர்த்துக்கொள்ளத் தூண்டுகின்றன. எனவே பற்றுகள் தூய்மையின்
தடைக்கல்லாய் இருக்கின்றன.
தூயோராகும் வழிகள்:
நாம் தூய்மையின் கருவியாக மாற
வேண்டுமெனில் நம்முடைய ஆணவத்தைத் தொலைத்து இறைமகன் கற்றுக்கொடுத்த அன்பு, இரக்கம், தாழ்ச்சி, அர்ப்பணிப்பு இவற்றை நமது செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். நாம் நம்மையும்
பிறரையும் பாவக்கறைகளில் இருந்து விடுவிக்க நமது அன்புச் செயல்கள், இரக்கச் செயல்கள், தாழ்ச்சி நிறைந்த
செயல்கள் காரணமாய் இருக்கின்றன. அன்னை தெரசாவைப் போன்ற புனிதர்களின் அன்பும், இரக்கமும் தாழ்ச்சியும் நிறைந்த செயல்கள் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பிறரைத் தூய்மைப்படுத்தவும் உதவியுள்ளன. நாமும் நம்மைச்
சார்ந்தவர்களும் பாவமன்னிப்புப் பெற்றுத் தூயோராய் வாழ நாம் உடலாலும், உள்ளத்தாலும் தூயவராம் கடவுளின் பற்றற்ற தன்மையை, அன்பை, இரக்கத்தை, தாழ்ச்சியை, பகிர்தலை சுமந்து செல்லும் பணியாளர்களாய் நாம் மாற வேண்டும். தன்னலம் கருதா பிறர் நலம் பேணும் மனம் நம்முள் நிரம்பி, சகமனிதரைக் குற்றப்படுத்தும் செயலைக் களைந்து, தற்பெருமை விடுத்து வாழும் போது நாம் தூயோராய் வாழ்ந்து இறைவனின் சாயலாய் மாறுவோம் இறைவனைக் காண்போம். ( மத் 5:8 )
Comments
Post a Comment