கடவுள் அருளும் படைக்கலன்கள்


கடவுள் அருளும் படைக்கலன்கள்

உண்மை எனும் இடைக்கச்சை:

          நமது இறைவன் உண்மையுள்ளவர். எந்த விதமான போலித்தனமும் அற்றவர். போலித்தனத்தை வெறுக்கின்றவர். அவ்வாறு வாழ்கின்ற வெளிவேடக்காரர்களைப் பார்த்து வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே ( மத் 23:27 ) என்று பகிரங்கமாய் குற்றஞ்சாட்டியவர். தன் பாவத்திற்காக மனம் வருந்திய ஆயக்காரரின் செபத்தை விரும்பியவர் ( லூக் 18:14 ) எனவே அலகையை வெற்றி பெற நமக்கு முதலாவது தேவைப்படுவது நொறுங்கிய உள்ளம். கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே. ( தி.பா 51:17 ) முழுமையான ஒப்புரவு அருட்சாதனம் பெற்றபின் தான் இறைவனின் வார்த்தையும், ஆவியானவரும் நம்மில் வலுவாகச் செயல்பட முடியும். ஏனென்றால் தூய உள்ளத்தோர் மட்டுமே கடவுளைக் காண முடியும். ( மத் 5:8 ) நல்ல முறையில் ஒப்புரவு அருட்சாதனம் பெற நாம் உள்மனக் காயங்களில் இருந்து விடுபட வேண்டும். உள்மனக்காயங்கள் ஆற்றப்பட்டு, பாவத்திலிருந்து விடுதலையானவுடன் நாம் பாறைமேல் கட்டப்பட்ட வீடு போன்று இறைவனில் ஆழமாய் வேரூன்றி வளர்வோம்.

நீதியெனும் மார்புக்கவசம்:

          நம்மைத் துன்புறுத்துவோரையும் அன்பு செய்வதே கிறிஸ்தவனின் தலையாய கடமை. ( மத் 5:44 ) ஏனென்றால் நம்மை அன்பு செய்கிறவரை தாமும் அன்பு செய்வது என்பது அனைத்து மதத்தினரும் பின்பற்றுவது. எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் பிறரைக் குற்றப்படுத்தாமல் நியாயப்படி நடக்கின்றோம் என்று நீதிமன்றம் போல் செயல்படாமல் இரக்க மனத்துடன் செயல்பட வேண்டும். கடவுள் நீதியுடன் இருப்பதால் தான் நாமும் இந்த உலகமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவன் நியாயத்தீர்ப்பு வழங்க முன்வந்தால் நாம் சாம்பலாகிவிடுவோம். எனவே நமது செபங்களை ஏறெடுக்கும் போதும், பிறருடன் பழகும் போதும், உறவுகளுடன் உரையாடும் போதும், இயேசுவை பிறருக்கு அறிமுகம் செய்யும்போதும், இறைவார்த்தையை அறிவிக்கும் போதும் நீதியை நமது மார்புக்கவசமாக அணிந்து கொள்வோம்.

அமைதியை அருளும் நற்செய்தி:

          அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். இந்த தயார் நிலையே நமது மிதியடிகளாக இருக்க வேண்டும். துன்பங்களிலிருந்து நம்மைத் தூக்கி நிறுத்த வல்லவர் நம் இறைவன் என்ற அமைதியை நாம் பிறருக்கு ஊட்ட வேண்டும். இல்லங்களிலும், சமுதாயங்களிலும் உள்ள குழப்பங்களையும், கலகங்களையும் நீக்கி அமைதியை அருளும் நற்செய்தியை அனைவருக்கும் ஊட்ட வேண்டும். அப்போது ஆண்டவர் தம்மை மறைத்துக் கொள்ளாமல் செல்லவேண்டிய பாதையைக் காட்டுவார். ( எசா 30:20-21 ). நற்செய்திப் பணி திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரின் கடமை அல்லவா? எனவே தான் நற்செய்தி அறிவிப்பவரின் கால்கள் எத்துணை அழகானவை என்று மறைநூல் கூறுகிறது. ( எசா 52:7 ) அப்பொழுது செயலற்ற நமது கால்கள் மானின் கால்கள் போன்று மாறும்.

நம்பிக்கை எனும் கேடயம்:

          இறை நம்பிக்கையை நாம் கேடயமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். எனக்குள் இருக்கும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றலுண்டு. ( பிலி 4:13 ). எனது மடமையில் அவரது ஆற்றல் விளங்கும் ( 1கொரி 1:26 ) என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் இருக்கும் போது தீயோனின் தீக்கணைகளை வெல்ல முடியும்.

மீட்பெனும் தலைச்சீரா:

          நமது இறைமகன் இயேசு நம்மை மீட்கவே இப்பூவுலகில் உதித்தார். ஆயனாம் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து ஆடுகளும் மீட்கப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம். பலவகையிலும் பலதரப்பட்ட ஆன்மாக்களை மீட்க இறைவன் நம்மை அழைக்கின்றார். உத்தரிக்கின்ற ஸ்தலத்தில் வாழும் ஆன்மாக்கள் தங்கள் வேதனைகளிலிருந்து விடுபட, நித்திய இளைப்பாற்றி அடைய செப, தப முயற்சிகள் மேற்கொள்வது ஒரு வகையான மீட்புப்பணி. பல புனிதர்களின் வரலாற்றைப் படிக்கும்போது இறைமகனும், நம் அன்பையும் இத்தகு செப முயற்சியை வலியுறுத்தி இருப்பதைக் காணலாம். மக்கபேயர் ஆகமத்திலும் இதனை அறியலாம். இவ்வுலகில் வாழும் மக்களை இறைத் திட்டப்படி வாழ வழி நடத்துவது மற்றொரு செயலாகும். எனவே மீட்புப்பணி புரிய நமது செபங்கள், களப்பணி தவிர நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள், வேதனைகள், மன அழுத்தங்கள், பயங்கள், வேலைப்பளு, ஏமாற்றங்கள் அனைத்தையுமே ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்கான செபங்களாக மாற்றி ஆன்மாக்களை மீட்கலாம்.

வார்த்தை எனும் போர்வாள்:

          இறைவனின் வார்த்தையை, இறைத் திட்டப்படி நாம் நடந்து போகும் பாதையில் எதிர்கொள்ளும் முள்செடிகளைத் தறிக்க போர்வாளாகப் பயன்படுத்திக் கொள்வோம்.

          பொல்லாத நாள்களிலும் திகிலின் நாட்களிலும் இறைவன் அருளும் போர்கலன்களைக் கொண்டு நாம் வெற்றி வாகை சூட முடியும். ( எபே 6:13-17 ) இவ்வாறே நம் அன்னை தம் வாழ்க்கையை வாழ்ந்தார். விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டார்.

Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்