நீர் மட்டும் எனக்குப் போதும்
நீர் மட்டும் எனக்குப்
போதும்
ஆதியிலே
கடவுள் உண்ண வேண்டாம் என்ற கனியை மனிதன் உண்டான். கடவுளின் அறிவுரையை மீறியதால் நிலைவாழ்வின் கனியை இழந்தார்கள். அவர்கள் கண்கள் திறக்கப்படுகின்றன. நன்மை, தீமை அறிபவர்கள் ஆனார்கள். இதற்கு முன் தீமை அவர்கள் வாழ்வில் இல்லை. அலகை நுழைந்ததால் திறக்கப்பட்ட
கண்கள் இவ்வுலக நாட்டங்களை நாடின. ஆடையை நாடுகிறார்கள் ( தொ.நூ 3:7 ) வானதூதர்களைப் போன்று இருந்தவர்களிடம் அலகை வாயிலாக, கீழ்ப்படிதலின்மையின் மூலம் இச்சை நுழைகிறது.
கண்களை திறக்கும்
நற்கருணை:
எம்மாவுஸ்
நோக்கிச் செல்லும் சீடர்கள் இயேசுவின் மரணத்தைப் பற்றி வேதனையோடு பேசிக்கொண்டு செல்கிறார்கள். அவர்கள் இதயத்தில் இயேசுவை நோக்கியத் தேடல், தாகம் வேரூன்றி
நிற்கிறது. அப்போது இயேசு அவர்களோடு இணைந்து சென்று மெசியா பாடுபட்டு மரித்தால் தான்
உயிர்த்தெழுந்து மகிமை பெறுவார் என்று உணர்த்தி அப்பத்தைப் பிட்டு
பகிர்ந்தளிக்கும் போது அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன. வேதனையிலும், பயத்திலும், இழப்பிலும், வெறுப்பிலும்
மூடியிருந்த கண்கள் இயேசுவின் அறிவுரையால் திறக்கப்படுகின்றன. ( லூக் 24:30-31 ) இயேசுவோடு இணைந்திருக்கும் போதும், இயேசுவைத் தேடும்போதும் தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன் ( எசா 35:7 ) என்பதற்கேற்ப ஆவியானவர் நம்மில் இறங்கிவரும் போதும் கடவுளது திட்டங்களையும், செயல்களையும் நம்மால் அறிய முடியும் ( 1கொரி 2:11 )
என் தேடல் நீ:
அரசாங்க
அலுவலராக, பணம் மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்த சக்கேயுவுக்கு, மனதில் அமைதியின்மை நிலவுகிறது. ஒரு குடும்பத்
தலைவரான அவர் இயேசுவைக் காண சிறுவனைப் போல தன்னைத் தாழ்த்திக் கொண்டு மரத்தில் ஏறுகிறார். இயேசுவைப் பற்றியத்
தேடல் அவர் இல்லத்திற்கு இயேசுவை வரவழைத்து அவர் வீட்டிற்கு சமாதானம் கிடைத்தது.
பெரும் பாடுடைய பெண், தனது உடல் பலவீனத்தைப்
பாராமல் அலைமோதும் கூட்டத்தில் இயேசுவின் அருகில் செல்லத் துடிக்கிறாள். அவளது பலவீனத்தில்
இது முடியாத காரியம். ஆனால் இயேசு மட்டும் போதும் என்ற எண்ணம் அவருக்குச் சக்தியைக் கொடுக்கிறது. கூட்டத்தில்
முன்னேறி இயேசுவின் ஆடையைத் தொடுகிறாள். அவரது தேடல் இயேசுவின் வல்லமையை அவளிடம் செயலாற்றச் செய்து அவள் குணமடைகிறாள்.
பார்வையற்ற
குருடர்கள் இயேசுவைக் காண முடியாது. இயேசுவின் அருகில் அழைத்துச் செல்பவர் யாருமில்லை. எனவே கூவி அழைக்கின்றனர். “ தாவீதின் மகனே
மனமிரங்கும் “ எனக் கூவி அழைக்கும் போது சுற்றியிருந்த கூட்டம் அதட்டுகிறது. சக்தி எல்லாவற்றையும் திரட்டி
இன்னும் அதிகமாக கூவி இயேசுவை அழைக்கின்றனர். தாவீதின் மகனும் மனமிரங்கி கண்பார்வையை அளிக்கின்றார். இயேசுவை நோக்கிய அவர்களின்
தேடல் அவர்களது நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது.
சாத்தானின் தீக்கணைகள்:
சாத்தானின்
தீக்கணைகளை நம்பிக்கை எனும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டு அணைக்க வேண்டும். ( எபி 6:16 ) இயேசுவை நோக்கிய நம் தேடல் நம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இவ்வாறு அலகையின்
தீக்கணைகளை அணைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும். எனவே எந்தச் சூழ்நிலையிலும் நீர் மட்டும் போதும் என்று வாழுவோம். புனித அன்னை தெரெசா அவர்கள், “ கடவுளிடம் செல்ல
அதிகமாக செபிக்க வேண்டும். கடவுள் நம்மிடம் வர பிறர்நலத் தொண்டு புரிய வேண்டும் “ என்று கூறுகிறார்கள். எனவே நமது குறிக்கோள் இடைவிடாது செபம் செய்தலும், நம்மை வெறுப்பவரையும் அன்பு செய்து பணிவிடை புரிதலும் ஆகும். அப்போது நாம் எடுக்கும்
முயற்சிகள் எப்போதும் தடைபடாமல், நாம் உலக வாழ்விலும், இறை வாழ்விலும் வளரமுடியும். இறைவனை மட்டும் நாடும்போது நம்மிடம் உள்ள போட்டி, பொறாமைகள், ஆணவம், தன்னலம், ஈகோ போன்றவை
நீங்கும்.
Comments
Post a Comment