அன்னைக்குக் கரம் குவிப்போம்


அன்னைக்குக் கரம் குவிப்போம்


இறைவனின் எதிர்பார்ப்பு:

          எகிப்து நாட்டிலே அடிமைத்தனத்தில் வேதனைப்பட்ட இஸ்ரயேல் மக்களை மோசே இறைவாக்கினரைக் கொண்டு விடுவிக்க இறைவன் எண்ணுகிறார். எனவே மோசே இறைவாக்கினரின் பின் இஸ்ரயேல் மக்கள் தாங்கள் நெடுங்காலமாய் வாழ்ந்த நாட்டை, வீட்டை, நிலபுலன்களை விட்டுக் கிளம்புகின்றனர். நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு தனி மனிதரை நம்பி வேறு நாட்டுக்கு கடவுளின் பெயரால் பெரும் கூட்டமான மக்கள் செல்வோமா என்பது கேள்விக்குறி. இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுள் மீது கொண்ட நம்பிக்கை நம்மை வியக்க வைக்கும். செங்கடலின் நடுவே நடந்து செல்லும்போது இருபக்கமும் சுவர் போல் எழுந்து பயமுறுத்தி நிற்கும் கடல் நீர் ஒருபுறம்; துரத்தி வந்த எகிப்து மக்களை மூழ்கடிக்கும் நீர்த்திறள் மறுபுறம் - என்று அச்சுறுத்தி நின்றாலும் பதட்டமில்லாமல் மோசே தலைமையில் இறைவார்த்தையை நம்பிச் செல்கின்றனர். நாற்பது வருட பாலைவன வாழ்க்கையின் தளர்ச்சிகள் முணுமுணுப்பை மக்களிடையே ஏற்படுத்துகின்றன. மனித பலவீனத்தால் இஸ்ரயேல் மக்கள் செய்யும் தவறுகள் இறைவனை வேதனைப்படுத்துகின்றன. எனவே இஸ்ரயேல் மக்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

இறைவனைப் புகழ்வோம்:

          நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து முறுமுறுத்து சோர்ந்து போகின்றோம். ஆனால் இறைவன் நம்மை முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும், முழு இருதயத்தோடும், பிறரையும், தன்னையும் அன்பு செய்ய அழைக்கிறார். ( மத் 22:37-38 ) இதைத்தான் திருமண விருந்து உவமையில் திருமண ஆடை அணியாத நபரைக் கண்டிக்கும் போது இறைமகன் வெளிப்படுத்துகிறார். இறைமகன் உலகின் ஒளியாய் இருக்கிறார். ஒளியின் மக்களான நாம் எதிர்மறை எண்ணங்களை இருளில் தள்ளி நேர்மையான உள்ளத்தோடு இறைவனுக்கு புகழ்ப்பா இசைக்க வேண்டும். இறைவனின் நன்மைத்தனத்தை புகழ்வதே இறைவன் விரும்பும் பலி. ( தோபி 12:6-7 )

தூயவராம் இறைவன்:

          நமது இறைவன் தூய்மையானவர். நம்மை முழு மனதுடன் அன்பு செய்கிறார். அதுவே அவரது தூய்மை. அவரது தூய்மையின் ஒளி கதிரவனின் ஒளியை மங்கச் செய்கிறது. ( தி.வெ 22:23 ) எனவே நாம் தூயவராய் விளங்க இறைவனை முழு உள்ளத்துடனும், முழு ஆன்மாவுடனும், முழு இதயத்துடனும் அன்பு செய்ய வேண்டும். இஸ்ரயேல் மக்கள் சிறிதளவே தவறும்போதும் கடவுளால் கடுமையாகக் கண்டிக்கப் பட்டார்கள்.

இயேசுவின் இரக்கம்:

          இயேசுவின் அன்பும், இரக்கமும், திருச்சட்டத்தையும், ஒழுங்குகளையும் தாண்டியது. நமது பலவீனங்களைப் புரிந்து நம்மைக் குற்றப்படுத்தாமல் பாவமன்னிப்பைத் தந்து, நம்மை இரக்க வெள்ளத்தில் மூழ்கடிக்கிறார். பாவமன்னிப்பு நமது தவறை உணரவைத்து, இறை அன்பிலும், இறை விருப்பத்திலும் நடை பயிலவைப்பது ஆகும். ஏனென்றால் இறைவன் உள்ளத்து உண்மையை விரும்புகிறார். ( தி.பா 51:6 ) நமது மாற்றம் உள்ளம் சார்ந்ததாக இருக்கவேண்டுமே அன்றி வெளிவேடமாக இருக்கக்கூடாது என்று விரும்புகிறார். அப்பொழுதுதான் ஆண்டவரின் ஆவி நம்மில் தங்கும். ஏனெனில் அவர் உண்மையின் ஆவியானவர். ஆண்டவரின் ஞானம் நம்மில் தங்கும். ( தி.பா. 51:6 ) ஆண்டவரைப் பற்றிய அறிவு நமக்குக் கிடைக்கும். ( 1கொரி 2:10 )

அன்னை மரியின் பரிபூரண வாழ்வு:

          விண்ணக மண்ணக இராக்கினியாக முடிசூட்டப்பட்ட அன்னை இந்த உயர்ந்த இடத்தைத் தேடி அலையவில்லை. தனது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் இறைவனின் விருப்பப்படி வாழ்ந்தார். அதனால் தான் கன்னியான தான் கருவுற்றிருப்பதாக அறிந்தாலும் உன்னதக் கடவுளின் திட்டத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறார். ஆவியானவரின் பிரசன்னத்தை வரவேற்கிறார். பின்னர் மகிழ்ச்சியில் பாடலிசைக்கிறார். அவருக்கு வரும் சோதனைகள் அவரை வேதனைப்படுத்தவில்லை. மாறாக, மகனின் பணி வாழ்விற்கு அவரைத் தூண்டுகிறார். கானாவூர் திருமண விருந்தில் மகனின் பணிவாழ்வை மகிழ்வோடு ஆரம்பித்து வைக்கிறார். மகன் அனுபவிக்கப் போகும் வேதனைகளை அறிந்திருந்தாலும் முழு மனதுடன் மகனைப் பின்தொடர்ந்து சென்று வாழ்ந்தவர். திருத்தூதர்களையும் பணி வாழ்வுக்குத் தயாரிக்க இணைந்து செபிக்கிறார். அவரது நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்குக் காரணம் முழு மனதுடன் அன்னை இறைவனை அன்பு செய்து இறை விருப்பத்தை நிறைவேற்ற முயன்றதே ஆகும். எனவே மாசில்லாக் கன்னியாக அன்னை திகழ்கிறார். சுயநலமில்லா அவரது அன்பு அவரை விண்ணக மண்ணக அரசியாக உயர்த்துகிறது. எனவே தூய உள்ளத்தைப் பெற
  • v  சுயநலம் பாராமல் முழுமனதுடன் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.
  • vஅப்போதுதான் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட நம் சக மனிதர்களை அன்பு செய்ய முடியும்.
  • v  திருச்சட்டத்தின் நிறைவு அன்பு.
  • v  அன்பு நம்மில் இல்லையேல் நாம் பொய்யர்கள். தூய்மை அற்றவர்கள். ( எசா 30:9 ) எனவே அன்னையைப் போன்று தூய்மையைப் பெற முழுமையாக இறைவனை அன்பு செய்வோம். இறை விருப்பத்தினை இறைவன் கொடுத்த அறிவினைக் ( ஆறாம் அறிவு ) கொண்டு அறிந்து நிறைவேற்றுவோம். அன்னை வழி நடப்போம். அன்னைக்கு கரம் குவிப்போம்.


Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்