நிறைவை நோக்கி
நிறைவை நோக்கி
நமது வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல
நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள். ( மத் 5:48 ) நிறைவின்மையாலே நமது ஆதி பெற்றோர் பாவம் செய்தனர். அவர்களது மனநிறைவு இல்லாத தன்மையே ஆண்டவருடைய அன்பின் வளத்தைச் சுவைக்கத் தடையாக இருந்தது. அவர்களது
நிறைவின்மை அவர்களுக்கு அச்சத்தைத் தோற்றுவித்தது. இந்த வளமையானத் தோட்டம் என்றுமே நமக்கு
அளிக்கப்படுமா? அல்லது நாம் விரட்டப்படுவோமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. இந்த அச்சத்தைப் பயன்படுத்திக் கொண்ட அலகை, பாம்பு வடிவில் வந்து அவர்களை பாவம் செய்யத் தூண்டியது. நாம் கடவுளைப் போல்
ஆக வேண்டும் என்ற பேராசை எழுந்தது. எனவே மனநிறைவின்மை பயத்தையும், பேராசையையும் தூண்டி, முதல் மனிதனைப் பாவத்திற்கு அடிமைப்படுத்தியது.
காயினின் நிறைவின்மை:
நமது ஆதிப்பெற்றோரிடம் இருந்த மன
நிறைவின்மை, அவர்களுக்குப் பிறந்த காயினிடமும் தொடர்கிறது. அவன் கடவுளுக்கு அளித்த காணிக்கைகள் முதற்கனிகளாக இல்லை. மனநிறைவோடு மகிழ்ச்சியாக ஆடுகளை
மேய்க்கின்ற ஆபேல் கொழுத்த கன்றுகளை இறைவனுக்குக் காணிக்கையாக அளிக்கின்றான். எனவே காயின் ஆபேல் மீது பொறாமை கொண்டு
கொலை செய்கிறான் (தொ.நூ 4:1-8 ) எனவே மன நிறைவின்மை, பொறாமையைத் தூண்டி கொலை செய்ய அழைக்கின்றது. மன நிறைவின்மை, உழைப்பை மந்தப்படுத்தி நம்மைத் தாழ்வு மனப்பான்மை உள்ளவராக மாற்றுகிறது.
மனநிறைவால் உயர்ந்த தானியேல்:
தானியேல் விண்ணகத் தந்தையின் அன்பிலே நிறைவுள்ளவராய் இருந்தார். திருச்சட்டத்திற்கு கீழ்ப்படிந்து உணவு விதிகளை
பின்பற்றுகிறார். அவரது மனநிறைவு அவரை தெய்வ பயத்தால் நிரப்புகிறது. எனவே ஞானத்தால் நிரப்பப்பெற்று அரசனால் உயர்த்தப்படுகிறார். ( தானி 1:1-21 )
மனநிறைவால் யூதித் அடைந்த வெற்றி:
கணவனை இழந்த யூதித், தனது வாழ்வினை
வெறுமையாகக் கருதவில்லை. இறைவனில் நிறைவுடையவராக வாழ்ந்து செபத்திலும் தவத்திலும் தம் வாழ்வைக் கழிக்கின்றார். இறைவனில் நம்பிக்கை வைத்துத் தம் குலத்தைக் காப்பதற்காக தம் உயிரையே பணயம் வைக்கிறார்; எதிரிகளை வெல்கிறார்; தம் குலத்தவராம் இஸ்ராயேல் மக்களை வெற்றிவாகை சூட வைக்கின்றார். அவரது மனநிறைவு தெய்வ பயத்தை
அவருள் தூண்டி ஞானத்தால் நிரப்புகிறது. ( யூதி 8-14 அதிகாரங்கள் )
கைம்பெண்ணின் காணிக்கை:
ஏழைக் கைம்பெண் ஒன்றும் இல்லாமையிலும் கடவுளின்
பாதுகாப்பை உணர்ந்து மனநிறைவோடு வாழ்கின்றார். எனவே தனக்கு இருப்பதையெல்லாம்
காணிக்கையாக அளிக்கின்றார். எனவே மனநிறைவு வள்ளன்மையைத் தூண்டுகிறது. ( மாற்கு 12:41-44 )
நன்றியின் பலி:
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு
நிகழ்வுக்கும் நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். பகலிலே சூரிய ஒளி, இரவிலே நிலவின் ஒளி, உயிரூட்டுகின்ற காற்று, உணவளிக்கின்ற பூமி, நம்மை அன்பு
செய்கின்ற மனிதர்கள் - இவற்றிற்காக தினமும் நாம் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். நமது காணிக்கைப் பலி நன்றிப் பலியாக இருக்கட்டும். இதுவே இறைவனுக்குச் செய்யும் நறுமணப்பலி ஆகும். ( எபே 5:2 )
குடும்பத்தில் மனநிறைவு:
தம்பதிகளுக்கிடையே ஒருவர்
மீது மற்றவருக்கு உள்ள மனநிறைவே, குடும்பத்திலே நல்லுறவை வலுப்படுத்தும் சத்துணவு. பெற்றோரின் மனநிறைவு அவர்களது
குழந்தைகளை நல்ல பாதையில் வழிநடத்தும்.
எனவே நமது
நிறைவின்மை அச்சம், பொறாமை, பேராசை, சண்டை, சச்சரவுகள், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல் என பல பாவங்களுக்கு வேராகவுள்ளது. ஆண்டவரின் பால் நமது நிறைவு நம்மைத் தெய்வ பயமுள்ளவராக, பிறரன்பு மிக்கவராக மாற்றுகிறது. எனவே நிறைவின்மையை நமது வாழ்க்கையில் இருந்து வேரோடு அறுத்து, மனநிறைவு எனும் விதையை விதைத்து, ஆவியின் கனிகளாலும், கொடைகளாலும், வரங்களாலும் நிரப்பப்பெறுவோம்.
Comments
Post a Comment