உவர் நிலம் வளமாக மாற …


உவர் நிலம் வளமாக மாற

          ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் அந்தப் பழத்தை விளைவித்த நிலம் சாபத்துக்குள்ளானது. எனவே நிலம் முதலில் முட்செடிகளையே பிறப்பிக்கும். பின்னர் வயல் வெளியாக மாறி மனிதருக்குப் பயன்படும். அதற்கு மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தும்போது நிலம் ஈரப்பதமாக மாறுகிறது. ( தொ.நூ. 3:17-19 )

சாபம் உருவாகும் விதம்:

          கடவுளை அன்பு செய்யாமல் அவர் கட்டளையை மீறி மற்றக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கும்போது அந்தக் காரியங்கள் நமக்குச் சாபத்தையே தரும். அவ்வாறு தவறி நாம் பாவம் செய்தால் அதிலிருந்து விடுபட மனம் வருந்தி ஊதாரி மைந்தனைப் போல் நாம் நம்மை தாழ்த்தி நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தை இறைவன் விரும்பும் அளவில் பெற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் அந்தத் தவறில் விழாமல் இருக்க உழைப்பின் பயனை, வாழ்வின் வளமையை திறமைகளை இரக்கச் செயல்களாக மாற்ற வேண்டும். இரக்கச் செயல்களின் மூலம் வறண்டுபோன நம் நெஞ்சங்களில் ஈரம் துளிர்க்கும். அப்போது நம்மைச் சந்திப்போரிடம் நமக்குக் கனிவு பிறக்கும். இது ஒரு தொடர் வினையாக மாறி உலகை அன்பில் மூழ்கடிக்கும்.

சக மனிதரை மதித்தல்:

          இரக்கச் செயல்கள் புரிய சக மனிதர்களை மதித்து அன்பு செய்யும் மனது வேண்டும். நமது குடும்பத்தில் நம்மை அன்பு செய்கிறவர்களோடு மட்டும் உறவாடுவது குடும்ப உறவல்ல; கிறிஸ்துவ வாழ்க்கை முறை அல்ல. நம்மை வெறுப்பவரையும், இகழ்வோரையும் அன்பு செய்வது அவரது மனமாற்றத்திற்கு உதவும்.

இல்லாமையிலும் அன்பு செய்தல்:

          எல்லா வளங்களும் பெற்ற நிலையில் நாம் அன்பு செய்வது எளிது. எல்லாவற்றையும் இழந்த பின்னும் இறைவனையும், பிறரையும் அன்பு செய்வது கடினம். ஆனால் யோபுவோ இரு நிலைகளிலும் கடவுளையும், பிறரையும் அன்பு செய்கிறார். நம்மை அன்பு செய்வோரை மட்டும் அன்பு செய்வது அனைத்து மதத்தினரும் பின்பற்றும் ஒன்று. நம்மை இகழ்வோரையும் அன்பு செய்வது தான் கிறிஸ்தவத்தின் தனித்துவம்.

அலகையின் தந்திரம்:

          அலகை தந்திரம் மிக்கது நிறைவின்மையைத் தூண்டி ஆதிப் பெற்றோரை பாவத்தில் விழ வைத்தது. ஆனால் நாட்டைவிட்டு ஓடிய, மாமனாருடைய கால்நடைகளை மேய்த்த திக்குவாய் மனிதர் மோசே தான் யூத குலத்தையே பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு நாற்பது வருடங்களாக வழிநடத்தினார்.

          யூதித்து கைம்பெண் நிலையில் இருந்த போதுதான் தன் நாட்டை எதிரியின் பிடியில் இருந்து மீட்டார். தானியேல் நாடு கடத்தப்பட்ட நிலையில்தான் பிறநாட்டு அரசனின் அன்பைப் பெற்றார்.

          கைம்பெண்ணான ரூத்து மாமியாரின் கைவிடப்பட்ட நிலையைக் கண்டு இரங்கிய போது தான் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் இடம் பெறுகிறார்.

          இவர்கள் தங்கள் வாழ்வின் குறைவைப் பெரிதுபடுத்தாமல் கடவுள் மீதும் சக மனிதர்கள் மீதும் அன்பும், மரியாதையும் கொண்டு இருந்ததால்தான் சாபங்களை வரமாக மாற்றி சக மனிதர்களுக்கு விடுதலை தர முடிந்தது.

 நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை:

          ஏழைக் கைம்பெண் தனக்கு இருந்த பண நெருக்கடியிலும் அந்தச் செப்புக் காசைப் போடுகிறார். எனவே நமது அன்றாடப் பிரச்சினைகளில் மூழ்காமல் பிறர் நலன் காக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நோயாளிக்கு மருத்துவர் தேவை. அவ்வாறே பிரச்சினைகளுக்குரிய மனிதர் நம் வாழ்வில் கடந்து வரும்போது நமது செபங்களாலும், உதவிகளாலும் அவர்களைத் தாங்க வேண்டும். அப்போது அவரது பிரச்சினை அகலும். இந்த உதவியைக் கண்ணோக்கும் இறைவனும் தமது அன்பினால் நம்மை அரவணைப்பார்.

அரசக் குருத்துவத் திருக்கூட்டம்:

          கடவுள் தம் சாயலாக நம்மைப் படைத்தார். நாம் அனைவரும் கடவுளின் கண்மணிகள் ( செக் 1:8 ) நாம் அனைவரும் கடவுளின் உள்ளங்கையில் பொறிக்கப்பட்டுள்ளோம். ( எசா‌ 49:16 ) அரசக் குருத்துவத் திருக்கூட்டமாய் உள்ளோம். ( 1பேது 2:9 ) கடவுளின் கைவேலைப்பாடான நாம் நமது நிறைகளை பிறருக்கும் பயன்படுத்தி பிறரது குறைகள் நீங்க உதவுவதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிப்பலி, புகழ்பா ஆகும். அவ்வாறு செய்ய மறுக்கும்போது பிறரையும், இறைவனையும் காயப் படுத்துகிறோம்.

          அன்னை மரியா எல்லா வேதனையிலும் கடவுளோடு இணைந்து இருந்தார். எனவே தான் அவரால் கடவுளைப் புகழ்ந்து பாட முடிந்தது. எனவே அவர் விண்ணக மண்ணக அரசியாய் முடிசூட்டப் பெற்றார்.

காயங்களை ஆற்றுவோம்:

          அன்னை தெரெசா பிற மனிதர்களின் சீழ்பட்ட காயங்களைத் துடைத்து மருந்திட்டார். நம்மால் அதைச் செய்ய முடியாவிடினும் நம்மைச் சூழ்ந்து வாழும் மனிதர்களின் சீழ்ப்படிந்த, உள் மனக்காயங்களை நம் இரக்கச் செயல்களாலும், அன்பினாலும், அங்கீகரித்தலாலும் ஆற்றலாமே. அப்போது நம் குடும்ப வாழ்க்கை முள்களை பிரசவிக்காமல் நல்ல வளமான வயலாக மாறும்.


Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்