தீர்ப்பு அளிப்பது இறைவனின் வார்த்தையே
தீர்ப்பு அளிப்பது
இறைவனின் வார்த்தையே
நாம் நமது கண்ணில்
இருக்கும் மரக்கட்டையை விட்டுவிட்டுப் பிறர் கண்ணில் இருக்கும் துரும்பை அகற்றப்
பார்க்கிறோம். ( லூக் 6:41 ) நாம் பெரும் பாவிகளாக, சுயநலக் காரர்களாக, மடையர்களாக இருப்போம். நமது பலவீனங்களை மறைக்க பிறருடைய இயலாமையைப் பெரிதுபடுத்திப் பேசுகிறோம்.
நீதியுடன் இணைந்த அர்ப்பணிப்பு:
ஆண்டவருக்குக்
காணிக்கை அளிப்பது மிகவும் முக்கியமே. ஆனால் பிறரைக் குற்றப்படுத்தி, காயப்படுத்தி இரக்கமின்றி ஒரு வாழ்க்கை வாழும்போது நமது அர்ப்பணம்
அர்த்தமற்றதாகி விடுகிறது. ( மத் 23:23 ) பழைய ஏற்பாட்டில் சகோதரன் ஆபேலுடன் மனத்தாங்கல் கொண்ட காயினின் காணிக்கை ஏற்கப்படவில்லை.
தாழ்ச்சியோடு இணைந்த பாவமன்னிப்பு:
பாவமே அறியாத
இறைமகன் இயேசு நமது பாவங்களுக்காக சிலுவை மரணம் ஏற்றார். பாவச் சூழ்நிலையில் வாழுகின்ற
நாம் பாவச் சேற்றிலிருந்து விடுவிக்கப்பட்டபின் பிறரையும் பாவத்தில் இருந்து, இயலாமையிலிருந்து விடுவிக்க
முயலவேண்டும். இறைமகன் நம்மைப்போல் ஒருவராகி, பாவம் தவிர எல்லாவற்றிலும் மனித வாழ்க்கை வாழ்ந்ததால் தான் மனுக்குலத்தை மீட்க
முடிந்தது. இறைமகன் பாவம் தவிர எல்லாவற்றிலும் மனிதரைப் போன்று தம்மை தாழ்த்துகிறார். அவ்வாறே நாமும் நம்
குழந்தைகளை அதிகாரத்தோடு திருத்தாமல் நமது தாழ்ச்சியினாலும், முன்மாதிரியான
செயல்களினாலும் குழந்தைகளுக்கு அறிவு புகட்ட வேண்டும். புனித பிரிஜித்தம்மாளின் முன்மாதிரியான
வாழ்வே அவரது குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தது. மாறாக எந்த அறிவுரையும் அவர்
கூறவில்லை. ஏனென்றால் நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும் ( மத் 12:33 ) அவ்வாறே நிறுவனங்களை நடத்துபவரும், உயர்பதவியில்
இருப்பவர்களும் தாமே நல்ல பணியாளருக்கான முன் மாதிரிகையாகத் திகழும் போது
நிறுவனம் முன்னேறும்.
குறைகளைச் சுட்டிக்காட்டல் – இறுமாப்பின் வெளிப்பாடு:
பிறரிடம் காணும்
குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசாமல் இரக்க உணர்வோடு கையாள வேண்டும். அதுவே நீதி. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் ( மத் 9:13 ) என்ற இறைவன் நமது இயலாமையைப் புரிந்துகொண்டு ஒப்புரவு திருவருட்சாதனம் உள்பட திருவருட்சாதனங்களைத் தந்து நம்மைத் தூய்மைப்
படுத்துகிறார். எனவே தான் ஆண்டவர் இரக்கமும் நீதியுமுள்ளவர்.
நமது வானகத் தந்தை இரக்கமுள்ளவர். நமது குற்றங்களை
இடைவிடாது மன்னித்துக் கொண்டிருக்கிறார். நம்மையும் பிறரை மன்னிக்க அழைக்கிறார். ஆனால் நாமோ பிறரைக்
குற்றஞ்சாட்டி இறுமாப்புடன் வாழ்கிறோம். பிறரையும் மனமாற்றத்திற்கு உட்படுத்தாமல் நாமும் பாவத்தில் விழுகிறோம். நம் சகோதரனை அறிவிலியே எனும்போது எரிநரகத்திற்குச்
செல்வோம் ( மத் 5:22 ) பிறரை பாவத்திலிருந்து விடுவிக்க நமது தாழ்ச்சி, அர்ப்பணம், ஒறுத்தல் முயற்சிகள் போன்றவை
தேவை. இயேசு தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருந்த போதிலும் காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்பவர் இல்லையா?
கட்டி எழுப்பப்படும் விண்ணரசு:
பிறரைக்
குற்றஞ்சாட்டி பிறரது பலவீனத்தைப் பெரிதுபடுத்தி வாழாமல், பிறருக்காக நமது வாழ்வை அர்ப்பணிக்கும் போது இடிந்து கிடந்தவற்றையும் தகர்ந்து கிடப்பவற்றையும் கட்டி எழுப்புவோராக நாம் மாறுவோம். ( எசா 58:9-12 ) ஆண்டவருடைய வேதனை மிகு பாடுகளால் நாம் மீட்கப்
பெற்றோம். அவருடைய பாடுகளை வெறும் புற்பூண்டுகளைப் போன்ற நாம் தியானிக்கும் போது இறையன்பு நம்மை நிரப்பும். தூய ஆவியானவர்
பிறரை அன்பு செய்யத் தூண்டுவார். இறைவார்த்தையை உணவாக உட்கொள்ளுதல் போல் தினமும் தியானித்து வரும்போது
இறைவார்த்தை நமது தவறுகளை உணர்த்தும். ஏனென்றால் இறைவார்த்தை இருபுறமும் கருக்கு வாய்ந்த வாள் போன்றது. நற்செய்தியை அறிவிப்பவரையும், பெறுபவரையும் திருத்தக் கூடிய வாள் இறைவார்த்தை. ( எபி 4:12 ) எனவே, ஒருதலைப்
பட்சமாகிப் பிறரைக் கூறாது இறைவார்த்தையால் நம்மைக் கழுவி புதுப்படைப்பாக மாறுவோம்.
Comments
Post a Comment