கதவு அருகில் நின்று தட்டும் இறைவன்
கதவு அருகில் நின்று
தட்டும் இறைவன்
இறைவன் நமது கதவு
அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறார். ( தி.வெ 3:20 ) நாம் கதவைத்
திறப்பதை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார். கதவு தட்டும் ஓசை நமக்கு கேட்டால்
மட்டுமே நம்மால் கதவைத் திறக்க இயலும். நமது இதயம் தாகத்தோடு இறைவனுக்கு ஏங்கி இருந்தால் மட்டுமே காதுகளில் ஒலி கேட்கும். இல்லாவிடில்
கேட்டாலும் செவிடர்களாய் தான் இருப்போம். ( எசா 6:10 )
இறைவிருந்து:
இறைமகன் விண்ணக, மண்ணக அரசராக
இருந்தபோதிலும் நம்மைத் தேடி வருகிறார். இவ்வுலக அரசர்கள் போன்று மாடமாளிகைகளில் வசித்துக் கொண்டு நம்மை
அடிமைகளாக நடத்துவதில்லை. இறைமகனின் அன்பும், இரக்கமும் நம்மில் பெருகி தாழ்ச்சியுடன் நாம் வாழும்போது கீழ்ப்படிதலுடன் நம் இதயக்கதவைத் திறக்க முடியும். இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதே என் உணவு ( யோ 4:34 ) என்பதற்கேற்ப இறைவன் நமக்கு அளித்துள்ள ஆசீர்வாதங்களை நமக்குப் பெற்றுத்தர இறைமகன் நமது இதயக் கதவு அருகில் நின்று
தட்டுகிறார். தமது ஆசீர்வாதங்களோடு நம்மில் வசிக்கிறார். விருந்துண்ண வந்த இறைவனோடு நாமும் இணைந்து விருந்துண்ண வேண்டாமா?
இறைவிருந்துக்கு ஏற்படும் தடைகள்:
இறைமகன், “ இறைவன் அளித்த
கட்டளைகளை நிறைவேற்றுவது என் உணவு “ என்கிறார். இறைமகனின் சகோதரர்களாகிய நாமும் அவரைப் பின்பற்றி அவரது தாழ்ச்சியையும், இரக்கத்தையும், கீழ்ப்படிதலையும் பின்பற்ற வேண்டும். நமது ஆணவப்போக்கு
நமது இதயத்தை கொழுப்பு நிறைந்ததாய் நமது செயல்களை மந்தப்படுத்தும். நமது இரக்கச் செயல்களைத் தடைசெய்து கீழ்ப்படிதலை நீக்கி, பாவத்தைப் பெருக்கும். அப்போது நமக்கு பாவ உணர்வே அற்றுப்போகும். பாவத்தோடு இறைமகனுடன் விருந்துண்ண
முடியாது. உறவாட முடியாது.
தடைகள் மறைந்து உறவு பெருக:
நமது அன்றாட
வாழ்க்கைச் செயல்களில் இறைவன் வாழ்ந்து காட்டுகின்ற அன்பு, இரக்கம், தாழ்ச்சி போன்றவற்றைப் பிரதிபலிக்க வேண்டும். நமது குடும்பங்களில் அன்பின் ஆட்சியை நாம் நிறுவ வேண்டும். நமது குடும்பங்களை
திருஇருதய பக்திக்கு ஒப்புக்கொடுக்கும் போது மட்டும் இறைமகனின் ஆட்சி நம்
இல்லத்திற்கு வருவதில்லை. திருமண உடன்படிக்கை அன்பு, இரக்கத்தைக் கொண்டு அமையும்போது மட்டுமே இதய அரசரின் இரக்கமும், தாழ்ச்சியும், அன்பும் நம் இல்லங்களில் நிலவும். மணப்பெண்ணும், மணமகனும், ஒருவர் ஒருவரின் அழகு, படிப்பு, வேலை, பதவி, சம்பளம், வரதட்சணை, சமுதாய அந்தஸ்து போன்றவற்றைப் பாராமல் ஒருவர் மற்றவரின் இல்லத்திற்கு ஒளியேற்றுபவர்களாக மாற வேண்டும். அப்போது நமது
இல்லங்கள் ஒளிமயமாய் திகழ்ந்து ஒளியாம் இறைவன் நம்மில் சுடர்விடுவார். இல்லையெனில் திருமணங்கள்
வியாபார நோக்கில் நடைபெற்ற இலாப, நஷ்டக்கணக்காகி விடும்.
இறைவன் நம்மில் வளர:
அன்பு, இரக்கச் செயல்கள்
என்பது நம்மை முன்னிறுத்திச் செயல்படாமல் பிறரது தேவை அறிந்து பகிர்வது, கொடுப்பது, இழப்பது ஆகும். வலதுகை செய்வது இடதுகைக்குத்
தெரியக்கூடாது என்பது போல நமது பெருமையை நாடாமல் பிறரது தேவை, நெருக்கடி அறிந்து உதவுவது
ஆகும். இது பொருளுதவியாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ, உடனிருத்தலாகவோ, உடலுழைப்பாகவோ இருக்கலாம். நான் குறைய வேண்டும் அவர் வளர வேண்டும் ( யோ 3:30 ) என்பதற்கேற்ப நம்மை
முன்னிறுத்தாமல் இறைவனின் மகிமைக்காக நமது செயல்களைச் செய்யும்போது அவை அன்புச்
செயல்களாக, இரக்கச் செயல்களாக இருக்கும். நமது தாழ்ச்சியையும், கீழ்ப்படிதலையும் பார்க்கும்போது நமது குழந்தைகளும், குடும்பத்தினரும், சமுதாயத்தினரும் அன்பையும், இரக்கத்தையும், தாழ்ச்சியையும் முன்னிறுத்தி வாழ்வார்கள். கீழ்ப்படிதலோடு இறைவனுக்கு இதயக்கதவைத் திறப்பார்கள்.
Comments
Post a Comment