அழைக்கப்பெற்றவர் பலர்; தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிலர்


அழைக்கப்பெற்றவர் பலர்; தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிலர்

          திருமண விருந்து உவமையில் ( மத் 22:1-14 ) அரசர் தம் மகனுடைய திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்படி பணிக்கிறார். அவர்களோ வர விரும்பவில்லை. பின்னர் திருமண விருந்தின் ஏற்பாடுகளை ( உணவு வகைகளை ) விளக்கி அழைக்குமாறு வேறு பணியாளர்களை அனுப்புகிறார். அவர்களோ பொருட்படுத்தவில்லை. மாறாக இழிவுபடுத்தி அனுப்புகிறார்கள். கோபமுற்ற அரசன் அவர்களை அழித்துவிட்டு அழைப்பைச் சாலையோரம் உள்ள அனைவருக்கும் விடுக்கிறார். அவர்களும் வருகின்றனர். திருமண ஆடை அணியாது திருமணத்தில் பங்குபெற்ற ஒருவனைக் கண்டு அரசன் கோபமுற்று அவனது காலையும், கையையும் கட்டி இருளில் தள்ளும்படி பணிக்கின்றான்.

உவமையின் விளக்கம்:

          திருமண ஆடை அணியாத மனிதன் என்பவன் திருமணக் கொண்டாட்டத்துக்குத் தன்னைத் தகுதிப்படுத்தாதவன். அவன் தன்னையே வெறுப்பதால் தனது உயர்ந்த அழைப்பை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அழைத்தவரின் உன்னதத்தையும் அவனால் உணர முடியவில்லை. தனது உடைகளால் அத்திருமணத்தின் உன்னதத்தையும், ஆடம்பரத்தையும், கொண்டாட்டத்தையும் பொலிவிழக்கச் செய்கிறான்.

அன்னை மரியின் கனிந்த உள்ளம்:

          நாமும் பல நேரங்களில் இவ்வாறு கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற மனித மாண்பின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமது திறமைகளை வெளிக்கொணராமல் நம்மையே வெறுத்து இறைவனது அழைப்பில், கொண்டாட்டத்தில் பங்குபெற மறுக்கிறோம். மாறாக நமக்குள்ள இல்லாமையை பெரிதுபடுத்தி இறைவனை அவமதிக்கின்றோம். பிறருடைய இயலாமையில், வேதனையில் நாம் பங்குபெற்று அவரைத் துன்பங்களில் இருந்து விடுவித்து இறைவனின் திருவிருந்துக் கொண்டாட்டத்தில் மனமகிழ்ச்சியுடன் பங்குபெற செய்ய உதவ வேண்டும்.

          அன்னை மரியா கருவுற்றபோது அவர் சிறுபிள்ளை. பெற்றோர் இல்லை. சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவாரோ என்ற நிலையற்ற நிலைமை அனைத்தும் இருந்தாலும் வயதான எலிசபெத்தம்மாளை சந்திக்க மலைநாட்டுக்குச் செல்கிறார். அங்கு சென்று அவருக்கு உதவுகிறார். அன்னை மரியின் கனிந்த உள்ளம் இயேசுவின் பணிவாழ்வின் கடைசி நேரம் வரை மட்டுமல்ல; அதன்பின் சீடர்களை ஒருங்கிணைத்து செபிப்பதன் மூலமும் தொடர்கிறது. “ கனிந்த உள்ளத்தினர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர் “. ( மத் 5:5 ) என்பதற்கேற்ப அன்னை மரியா பரிசுத்த ஆவியின் பத்தினியாக விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்படுகிறார்.

எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை:

          உலகில் உள்ள மக்கள் அனைவரும், தனிமை, பாதுகாப்பற்ற தன்மை, அச்ச உணர்வு இவற்றால் சூழப்பட்டுள்ளோம். இவற்றிலிருந்து நாம் விடுபட பிறருக்கு பாதுகாப்பு உணர்வு, பயமின்மையை அளித்து, தனிமையிலிருந்து விடுதலை தந்து நமது அன்பையும், அரவணைப்பையும் தரவேண்டும். நமது நோய் நொடிகளில் இருந்தும் இழப்புகளில் இருந்தும் நாம் விடுதலை பெற வேண்டுமானால் பிறரை இழப்புகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் நாம் விடுவிக்க வேண்டும். நமக்குப் பிறர் என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதை நாம் பிறருக்குச் செய்ய வேண்டும். இதுவே பொன் விதி. ( மத் 7:12 ) அப்போது நமக்கு மனஅழுத்தமோ நம்மேலும் பிறர்மேலும் வெறுப்புகளோ வராது. எனவே கனிந்த உள்ளத்தோடு பிறரை அணுகுவோம். இறைவனின் இரக்கத்தையும் பிறரோடு பகிர்வோம்.

Comments

Popular posts from this blog

பகிரப்படும் தாலந்துகள்