இறைவனோடு உரையாடல்
இறைவனோடு உரையாடல்
இறைவனோடு நமக்குள்ள
உரையாடலே செபம். இந்த உரையாடல் இறைவனைப் புகழ்வதாகவோ, மன்னிப்பு கேட்பதாகவோ, மன்றாட்டாகவோ, நன்றியறிதலாகவோ இருக்கலாம். உரையாடல் என்பது இருவருக்கு இடையே நடைபெறுவது ஆகும். எனவே விவிலிய வார்த்தைகளை
வாசிக்கும் போதும், கேட்கும்போதும், தியானிக்கும் போதும், மறையுரை கேட்கும்போதும் இறைவன் நம்மிடம் உரையாடுகின்றார். இருவரும் மனம் ஒருமித்து, மனம் திறந்து, ஒருவர் மற்றவரை மதித்து அன்பு செய்து உரையாடும்போது தான் அது வெற்றிகரமான உரையாடலாக இருக்கும். திருப்பலி
இறைவனுக்கும் நமக்கும் உள்ள உரையாடலின் சிகரமாக உள்ளது. திருப்பலியின் போது இறைவன் நம்முன் வந்து நம்மோடு வார்த்தை வடிவிலும், அப்ப வடிவிலும் இரண்டறக்
கலக்கின்றார். தொடக்கத்தில் தன் உயிர்மூச்சை ஊதி மனிதனை இறைவன் உருவாக்கினார். இன்று திருப்பலி என்னும் உன்னத உரையாடலின் நேரத்தில் தூய ஆவியானவரின் பிரசன்னம் நம்மைச் சூழ்ந்து நமக்குள்
ஊடுருவி நம்மில் ஒன்றறக் கலக்கிறது. திருவிருந்தின் மூலம் தூய ஆவியானவரின் அற்புத ஆற்றலை நாம் உணர்ந்து அனுபவிக்க முடிகிறது.
தூய ஆவியானவரின் பரிந்துரை:
தூய ஆவியானவர் நம்
வலுவற்ற நிலையில் நமக்கு த் துணை நின்று நாம் செபிப்பதெப்படி என்று கற்றுத் தருகிறார். அவரே நமக்காகப் பரிந்து பேசுகிறார். ( உரோ 8:26-28 ) எனவே தூய ஆவியானவரின் கொடைகளும், கனிகளும், வரங்களும் நம்மில் பொங்கி வழிய இறைவனிடம் தினம் மன்றாட வேண்டும்.
ஆவியானவரின் செயல்:
ஆவியானவரால் நாம்
நிரப்பப்பட வேண்டுமாயின் நாம் கடவுளிடம் அன்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும். தன்னை அன்பு
செய்கின்ற மக்களுக்காக இறைவன் உன்னதமானத் திட்டம் வகுத்திருப்பார். அப்போது
அவர்களுக்கு நன்மையானவை நிகழ ஆவியானவர் அவர்களுக்குத் துணையாக இருப்பார். ( உரோ 8:28 )
இறையன்பைப் பிறரோடு பகிர்தல்:
அன்னை தெரெசா வயது முதிர்ந்த, நோயுற்ற, நலிந்த, கைவிடப்பட்ட மக்களுக்காகத்
தன்வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவ்வாறே திருச்சபையின் தொடக்க முதல் இன்றுவரை பல குருக்களும், கன்னியர்களும், பொதுநிலையினரும் பணிபுரிந்து
வருகிறார்கள். இந்த அர்ப்பண வாழ்வு சமுதாயத்தில் கைவிடப்பட்ட பல மக்கள் இறையன்பை உணரத் தூண்டுகோலாக உள்ளது. அம்மக்கள் இறையன்பில்
ஆனந்தம் அடைகிறார்கள். இதனையே விண்ணகம் அடையும் வழி என்று மத்தேயு நற்செய்தியில் ( மத் 25:31-46 ) இறைமகன் இயேசு வெளிப்படுத்துகிறார்.
இறையன்பும், பிறரன்பும் நம்மில் நிறைவாக
இருக்கும் போதுதான் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உரையாடல் பயனுள்ளதாக, வல்லமையுள்ளதாக இருக்கும். அப்போதுதான் துணையாளராம் தூய ஆவியானவர்
நம்மை வரங்களாலும், கனிகளாலும், கொடைகளாலும் நிரப்புவார். நமது இறைப்பணி வல்லமையுள்ளதாக மாறும்.
உண்மையின் ஆவியானவர்:
ஆவியானவர் உண்மையின்
ஆவியானவர், நிறை உண்மையை நோக்கி நம்மை வழிநடத்துவார். எனவே நம்மில் போலித்தனம் நிறைந்திருந்தால் ஆவியானவர் நம்மில்
செயல்பட மாட்டார். போலித்தனம் அடிமை வாழ்வுக்கு இட்டுச் செல்லும். உண்மையின் மக்களே அரச குருத்துவத் திருக்கூட்டம் ஆவர். ஊதாரி மைந்தன் உவமையில் மூத்த
மகனிடம் தந்தை, மகன் என்ற உரையாடல் நிலவவில்லை. அவனிடம் அடிமை உணர்வு மேலோங்கி நிற்கின்றது. உண்மையான அன்பை அவன் தந்தையிடம்
பகிர்ந்து கொள்ளவில்லை. ஏனென்றால் தந்தையின் அன்பை அவன் புரிந்து கொள்ளவில்லை. தந்தையிடம் இருந்து கிடைக்கும்
சிறிய சந்தோஷங்களே அவனுக்கு முக்கியமாக உள்ளன. இவ்வாறு நாமும் விண்ணக அரசு எனும் மிகப்பெரிய பொக்கிஷத்தை நமது எதிர்நோக்காகக் கொள்ளாமல் சிறிய
சிறிய இழப்புகளில் நம்மை இழந்துவிடுகிறோம். இது இறைவனோடு நமக்கு உள்ள
உரையாடலை, உறவைப் பலவீனப்படுத்துகிறது. அப்பொழுது பிறரது மகிழ்ச்சியில் நம்மால் பங்குகொள்ள முடியவில்லை. பிறரது மனமாற்றம்
நம்மை மகிழச் செய்வதில்லை. மாறாக நல்ல குணம் கொண்டவர்களாய் வாழ நினைக்கும் நாம் பிறரையும் இறையன்பைச் சுவைக்கத்
தூண்டுவதும் இல்லை. பிறரது மனமாற்றம் நம்மில் குதூகலத்தைத் தருவதுமில்லை. இவ்வகைப் போலித்தனம் இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் நாம் புரிந்து பிறருக்கும் அதை வழங்கத் தடையாகவுள்ளது.
மனதின் அர்ப்பணம்:
இறைவனோடு இணைந்த
நம் வாழ்க்கையை மனதார வாழும்போது நமக்கென்று எந்தத் தேவையும் நமக்கு இராது. தந்தையுடைய
தெல்லாம் நம்முடையதே என்ற நிறைவு நம்முன் எழும். நமது துதிப்பாடலாக, நறுமணம் பரப்பும் காணிக்கைப் பொருளாக நமது மன்றாட்டு இறைவனைச் சென்றடையும்.
ஆண்டவர் விரும்பும் நோன்பு:
இயேசு பணிவாழ்வைத்
துவக்கும்போது அவர் வாசித்த இறைவார்த்தை சமுதாயத்தில் நலிந்த மக்களைக் கைதூக்கிவிடுவது பற்றியதாகும். ( லூக் 4:18-19 ) ஆண்டவர் விரும்பும்
நோன்பு பசித்தோர், வறியோர், உடையற்றோர் தேவையை நிறைவு செய்வதாகும். அப்போது நம் மன்றாட்டு கேட்கப்படும். ( எசாயா 58:7-9 ) இறைவனோடு நமக்கு உள்ள உரையாடலை நமது பிறரன்புச் செயல்கள் வலுப்படுத்துகின்றன. நம் தேவைகளும்
நிறைவேற்றப்படுகின்றன.
உரையாடலின் வெற்றி:
இறைவனோடு
உரையாடும்போது நம் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. நம் தவறுகள் உணர்த்தப்படுகின்றன. உன்னத இறைவனின்
பிரசன்னம் நம் உள்ளங்களில் எழுகின்றது. தூய ஆவியானவரின் ஆலயமாக நாம் மாறுகின்றோம். எனவே தூய ஆவியால் நாமும், நம்மைச்
சார்ந்தவர்களும், உலக மக்களும் நிரப்பப்பட வேண்டுமென்று தினமும் நாம் செபிக்க வேண்டும். அன்னை மரியின் பரிந்துரையை நாம் நாடிச் செபிக்கும்போது துன்ப வேளையிலும் மகிழ்ச்சிப் பாடல் பாடத்தூண்டும் தூய ஆவியானவரை நமக்கு அருள மகனைத்
தூண்டுவார்.
தூய ஆவியானவர் நம்
உள்ளங்களில் பேசிச் செபிக்க வேண்டிய முறையில் நாம் செபிப்பதெப்படி என்று கற்றுத் தருவார். இரண்டாவதாக பிறரன்புச் செயல்களைச் செய்வதன் மூலமாக நமது மன்றாட்டு
கேட்கப்படும். ஏனென்றால் பிறருக்கு நாம் இரங்கும் போதுதான் நம்மீது நம் இறைவனின் இரக்கம் கடந்து வரும். எனவே துணையாளராம் தூய ஆவியானவர் நாம்
பிறருக்காக வாழக்கூடிய மனப்பக்குவத்தை நமக்குத் தருவார். இவ்வாறு இறைவனின் இரக்கத்தை
நாம் பெற முடியும். நம் மன்றாட்டும் கேட்கப்படும்.
Comments
Post a Comment